விசுவை பார்க்க ஆஃபீஸுக்கு வந்த தனுஷின் தந்தை.. விரட்டிவிட்ட தயாரிப்பாளர். !!
தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வந்தவர் விசு. இவர் தொடக்கத்தில் பல மேடை நாடகங்களை எழுதியிருக்கிறார்.
அதனை தொடர்ந்து கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விசு, “கண்மணி பூங்கா” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து “மணல் கயிறு”, “சம்சாரம் அது மின்சாரம்” போன்ற தமிழ் சினிமாவின் முக்கிய வெற்றித்திரைப்படங்களை இயக்கியவர்.
இது ஒரு பக்கம் இருக்க, தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா, தொடக்கத்தில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். அதன் பின் இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கஸ்தூரி ராஜா, அதன் பின் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கினார்.
இந்த நிலையில் இயக்குனர் கஸ்தூரி ராஜா, இயக்குனர் விசுவிடம் தான் உதவி இயக்குனராக சேர்ந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துகொண்டிருந்தபோதே விசுவின் நாடகங்கள் படமாக எடுக்கப்படுவதை கஸ்தூரி ராஜா கவனித்து வந்தாராம். சிதம்பரம் என்ற மேனேஜர் மூலமாக ஏற்கனவே விசுவுக்கு அறிமுகமாகியிருந்தார் கஸ்தூரி ராஜா. அதன் பின் அன்னக்கிளி செல்வராஜிடம் கஸ்தூரி ராஜா வேலை பார்க்க சென்றார். ஒரு நாள் தீபாவளி பண்டிகை சமயம் செல்வராஜ் கஸ்தூரி ராஜாவிற்கு 150 ரூபாய் தருவதாக கூறியிருந்தாராம். அந்த காலகட்டத்தில் 150 ரூபாய் என்பது பெரிய பணம்.
ஆதலால் செவராஜ் தங்கியிருந்த லாட்ஜுக்கு சென்றிருக்கிறார். ஆனால் அப்போது உள்ளே ஒரு தயாரிப்பாளருடன் பேசிக்கொண்டிருந்தாராம் செல்வராஜ். வெகு நேரம் கஸ்தூரி ராஜா லாட்ஜுக்கு வெளியிலேயே அமர்ந்திருந்தாராம். “எப்படியும் நேரமாகும், நாம் விசுவை சென்று சந்தித்து வந்துவிடலாம்” என அந்த லாட்ஜுக்கு சற்று தொலைவில் இருந்த கவிதாலயா புரொடக்சன்ஸ் கம்பெனிக்கு நடக்கத்தொடங்கினாராம்.
விசு அப்போது ஒரு புதிய திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. அதற்கான பூஜையும் போட்டு ஒரு மாதம் ஆகியிருந்தது. ஆனாலும் எப்படியாவது விசுவிடம் உதவியாளராக சேர்ந்துவிட வேண்டும் என நினைத்தார் கஸ்தூரி ராஜா.
கஸ்தூரி ராஜா கவிதாலயா புரொடக்சன்ஸ் அலுவலகத்திற்கு சென்றபோது அங்கே தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் இருந்தாராம். கஸ்தூரி ராஜா அவரிடம், “நான் விசுவை பார்க்க வேண்டும்” என கூற அதற்கு பிரமிட் நடராஜன், “விசு ஊரில் இல்லை. இங்கெல்லாம் இப்படி வரக்கூடாது” என விரட்டிவிட்டாராம். அதன் பின் மீண்டும் லாட்ஜுக்கு போய்விட்டாராம். அங்கே இன்னமும் செல்வராஜ் தயாரிப்பாளரிடம் பேசிக்கொண்டே இருந்தாராம். எனவே மீண்டும் கவிதாலயாக்கு சென்றிருக்கிறார். அங்கே பிரமிட் நடராஜன் மீண்டும் அவரை வெளியே துரத்தியிருக்கிறார். இவ்வாறு 16 முறை போய் வந்திருக்கிறார்.
அப்படியும் செல்வராஜ் வெளியே வரவில்லை. அப்போது விசுவிடம் உதவி இயக்குனராக இருந்த ஒரு நபர் அங்கே வர, அவர் கஸ்தூரி ராஜாவை பார்த்து “என்ன இங்க உட்கார்ந்திருக்க?” என்று கேட்க, அதற்கு கஸ்தூரி ராஜா, “செல்வராஜ் சார் பணம் தரேன்னு சொன்னார். ஆனா அவர் வெளிலயே வரல. விசு சாரை பார்க்கலாம்ன்னு போனேன், அவர் ஊர்லயே இல்லைன்னு சொல்லிட்டாங்க” என கூற, அதற்கு அந்த உதவி இயக்குனர், “யோவ், விசு சார் பக்கத்து ரூம்லதான்யா இருக்கார்” என கூறியிருக்கிறார்.
இதை கேட்டவுடன் கஸ்தூரி ராஜாவுக்கு அதிர்ச்சியாக இருந்ததாம். வாய்ப்பை அருகிலேயே வைத்துக்கொண்டுதான் இப்படி அலைந்திருக்கிறோமா? என்று நினைத்துக்கொண்டு உடனே அந்த அறையின் கதவை தட்டியிருக்கிறார். வெளியே வந்த விசு, “யார் நீங்க?” என கேட்க, அதற்கு அவர், “சார், மேனேஜர் சிதம்பரம் என்னைய பத்தி உங்க கிட்ட சொல்லிருந்தாரே” என்று ஞாபகப்படுத்த, “அட ஆமாம், ஆனா நாங்க ஒரு மாசத்துக்கு முன்னாடியே பூஜை போட்டுட்டோமே” என கூறியிருக்கிறார். அதன் பின் “நீ யார்கிட்ட அசிஸ்டன்ட்டா இருந்த?” என கேட்க, “கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சார் கிட்ட அசிஸ்டன்ட்டா இருந்திருக்கேன்” என கூறினாராம்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் விசுவுக்கு மிகவும் பிடித்த இயக்குனர். ஆதலால் அவரின் பெயரை கேட்டவுடனே என்ன ஏது என்று கூட கேட்காமல், “யூ ஆர் அப்பாய்ண்டன்ட், நீங்க என் கிட்ட அசிஸ்டன்ட்டா சேரலாம்” என விசு கூறிவிட்டாராம். இவ்வாறுதான் கஸ்தூரி ராஜா விசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.