ஆசிரியர் பணியை தக்க வைத்துக்கொள்ள: அரசு- தனியார் பள்ளி ஆசிரியர்களிடையே கடும் போட்டி....

ஆசிரியர் பணியை தக்க வைத்துக்கொள்ள: அரசு- தனியார் பள்ளி ஆசிரியர்களிடையே கடும் போட்டி....


 மாணவர் சேர்க்கை மூலம் பணியிட இருப்பை தக்க வைத்துக்கொள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

2022-23-ம் கல்வியாண்டு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் இயங்கி வரும் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து கிராமப்புறங்களில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரசின் நலத் திட்டங்கள் மற்றும் நன்மைகள் குறித்து ஆசிரியர்கள் வீதி வீதியாக சென்று பொது மக்களை சந்தித்து விளக்கிக் கூறுவதோடு, பொதுமக்களுக்கு அரசுப் பள்ளி செயல்பாடுகளின் விவரங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களையும் விநியோகித்து வருகின்றனர்.

இதேபோல் தனியார் பள்ளி ஆசிரியர்கள்,  பள்ளி வேனில் குழுவாக சென்று, ஆளுக்கு ஒரு வீதியை தேர்ந்தெடுத்து வீடு வீடாக சென்று தங்கள் பள்ளியின் கடந்த ஆண்டு சாதனை, பள்ளியில் உள்ள கட்டமைப்பு வசதிகள், ஸ்மார்ட் கிளாஸ், விளையாட்டு பயிற்சிகள் உள்ளிட்ட வசதிகளை எடுத்துக் கூறி, கட்டணத்தையும் தவணை முறையில் செலுத்த வசதி உள்ளது என்று  பேசி, மாணவர்கள் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர்.

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளித் தாளாளர் சேர்க்கை இலக்கு நிர்ணயித்து, அந்த இலக்கை அடைந்தால் தான் அடுத்த ஆண்டு பணியில் தொடர முடியும் என்று கறாராக கூறுவதால் வேறு வழியின்றி அவர்கள் மாணவர் சேர்க்கையில் அதி தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தத்தம் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தால் தான் அப்பள்ளி அதே இடத்தில் இயங்கும் எனவும், இல்லையெனில் அப்பள்ளி மூடப்பட்டு அருகிலுள்ள மற்றொரு பள்ளியோடு இணைக்கப்பட்டு, அப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றமும், தலைமையாசிரியர் நிலையில் இருந்து ஆசிரியர் நிலைக்கு மாற வேண்டிய நிலை ஏற்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதால் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர் சேர்க்கைக்கான போட்டியில் களமிறங்கியுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் ஆயிரம் கட்டமைப்புகள் இருந்தாலும், கவர்ச்சிகரமாக தினந்தோறும் அரசு பல அறிவிப்புகளை அறிவித்து வந்தாலும், எல்லாமே இலவசம் என்று அறிவித்தாலும், அங்கே மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் வெகுவாகவே குறைந்து வருகிறது.

 கொரோனா காலகட்டத்தில் இருந்த இக்கட்டான சூழ்நிலையில் தனியார் பள்ளிகளில் இருந்து பல லட்சக்கணக்கான மாணவர்கள் அரசு பள்ளிகளை நாடி வந்திருந்தாலும் அவர்களை தக்க வைத்துக் கொள்கிற தகுதி அரசு பள்ளிகளுக்கு இல்லாமல் போனதால் கடந்த ஆண்டு பல ஆயிரம் குழந்தைகள் அரசுப்பள்ளி களை விட்டு மீண்டும் தனியார் பள்ளியில் போய் சேர்ந்து விட்டார்கள். இந்த ஆண்டும் அதேபோன்று நிலைமை அரசு பள்ளிகளுக்கு ஏற்படும் என்கிற பயம் தான் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு காரணம்.

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காக எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கவர்ச்சிகரமான இலவசங்களை எல்லாம் அறிவித்து வருகிறது. எல்லாமே அள்ளிக் கொடுக்க தெரிந்த அரசுக்கு நல்ல கல்வியை கொடுப்பதற்கு போதுமான தகுதியான நல்ல ஆசிரியர்களை நியமனம் செய்ய தெரியவில்லை. இருக்கின்ற ஆசிரியர்களும் ஒழுங்காக வேலை வாங்கத் தெரியவில்லை.

திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒற்றை ஆசிரியர் கூட நியமனம் செய்யவில்லை. தற்கால ஆசிரியர்களை வைத்துத்தான் காலத்தை ஓட்டிக் கொண்டுள்ளனர். இந்த தற்கால ஆசிரியர்கள் வந்த பிறகு நிரந்தர பணியில் உள்ள ஆசிரியர்கள் எல்லா பணிகளையும் அவர்களின் தலையில் போட்டுவிட்டு இவர்கள் இன்னும் ஆயாக (Hai..) சுற்ற ஆரம்பித்து விட்டார்கள்.

நிலைமை இப்படி இருக்கையில் எப்படித்தான் அரசு பள்ளிகளை நம்பி பெற்றவர்கள் மாணவர்களை அனுப்புவார்கள்.…? அரசுப் பள்ளியில் கல்வியை தவிர எல்லாமே இலவசமாக கிடைக்கிறது. தரமான கல்விக்குத் தான் வழி இல்லாமல் இருக்கின்றது. அடிப்படையை ஆட்டம் காணும் போது அதை அழகுப்படுத்த ஆயிரம் திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதனால் ஒரு பலனும் வெளியே போவதில்லை.

 ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இதை முழுமையாக புரிந்து கொள்ளும் வரை அரசுப் பள்ளிகள் நிலை அப்படியே தான் இருக்கும். ஆகையால் இந்த ஆண்டும் அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகத்தான் இதுக்கு போகின்றது.