அரசு பள்ளியில் மேசை, நாற்காலியை அடித்து உடைத்த மாணவ, மாணவிகள்

அரசு பள்ளியில் மேசை, நாற்காலியை அடித்து உடைத்த மாணவ, மாணவிகள்

 தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இந்நிலையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வு முடிந்தது. பின்னர் அந்த மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டெஸ்க், ஸ்விட்ச், மின்விசிறி போன்ற தளவாட பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். உடனே சத்தம் கேட்டு தலைமை ஆசிரியர் முத்துசாமி வந்து பார்வையிட்டார். 

அங்கு மாணவர்கள் மேசை, நாற்காலிகளை உடைத்து கொண்டிருந்தனர். உடனே தலைமை ஆசிரியர் மாணவர்களை சத்தம் போட்டு கண்டித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர். அங்கு பள்ளியில் நடந்த சம்பவத்தை கூறி வகுப்பறையையும் தலைமை ஆசிரியர் காட்டினார். இதனை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.

பின்னர் எங்களது பிள்ளைகள் இனி இது போன்ற தவறுகள் நடக்காத வகையில் பார்த்து கொள்கிறோம். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கூறினார். நடந்த இந்த சம்பத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் என்று கூறி பெற்றோர்கள் எழுதி கொடுத்தனர். இதனால் மாணவர்களிடம் எழுதி வாங்கி விட்டு எச்சரித்து அனுப்பினர். இதையடுத்து பள்ளி வகுப்பறையில் மேசை, நாற்காலி போன்ற பொருட்களை உடைக்கும் சம்பவத்தை ஒரு மாணவன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வரைலாக பரவி வருகிறது. 

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி கூறுகையில் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் வகுப்பறையில் மேசை, நாற்காலிகளை அடித்து உடைத்து நொறுக்கி யுள்ளனர். இதனால் அவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து மாணவர்களை எச்சரித்து எழுதி வாங்கியுள்ளோம். மேலும் இது சம்மந்தமாக முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். அவர் இந்த சம்பவத்தை விசாரித்து மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார்.

இதுகுறித்து ஊர் பொதுமக்களிடம் விசாரித்த போது போதுமான ஆசிரியர்கள் இல்லாததும், இதே ஊரை சார்ந்த ஆசிரியர்கள் பல்லாண்டுகளாக இங்கே பணிபுரிவதும் தான் காரணம் என்கிறார்கள். உள்ளூர் ஆசிரியர்கள் ஓசி சம்பளம் வாங்கிக் கொண்டு ஓபி அடிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர். 

 இவர்கள் மாணவர்களின் கல்வி ஒழுக்கம் கட்டுப்பாடு எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. வெளியூர் ஆசிரியர்கள் வேளைக்கு வந்தோமா கையெழுத்து போட்டோமா சம்பளம் வாங்கினோமா என்கிற ரீதியில் சென்று கொண்டுள்ளனர். 

 எவருமே மாணவரின் கல்வி ஒழுக்கம் கட்டுப்பாடு என்று எதிலுமே அக்கறை செலுத்தாதது இந்த சீரழிவுக்கும் அட்டூழியத்திற்கும் முக்கிய காரணம்.

கடந்த வருடம் இந்தப் பள்ளியில் படித்த சில மாணவர்கள் வகுப்பறைக்குள்ளே ஒன்று சேர்ந்து சரக்கு அடித்து, வாந்தி எடுத்து, பள்ளியிலேயே மயங்கி விழுந்து பள்ளியை அசிங்கப்படுத்திய போது இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இதைப் பார்த்து மற்ற மாணவர்கள் பயந்து இருப்பார்கள் . அப்போது அவர்களை சும்மா விட்டு விட்டார்கள் இப்போது இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது. 

கருப்பண்ணன் என்கிற ஆசிரியரை கை நீட்டி அடித்து இருக்கிறார்கள்.  பல மாணவர்கள்  மாணவிகள் ஒன்று சேர்ந்து ஒரு வகுப்பறையை சூறையாடி இருக்கிறார்கள்.  இவர்களுக்கு இப்போது கொடுத்திருக்கும் தண்டனை என்பது ஐந்து நாள் சஸ்பெண்ட் மட்டுமே.  இதைப் பார்த்து ஊரே சிரிக்கிறது...!  போதுமா இந்த தண்டனை என்கிற கேள்வியை கேட்கிறது....!!

 இப்போதும் இன்னும் இங்கு படிக்கின்ற பல மாணவர்களுக்கு கஞ்சா, புகைப்பிடித்தல், மது பழக்கம் என்று பல்வேறு தீய பழக்கங்கள் உள்ளது. அத்தகைய மாணவர்களை இனம் கண்டு நடவடிக்கை எடுத்து ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால் தான் இந்தப் பள்ளியின் மீதுள்ள  அவ பெயரை நீக்க முடியும்.  இல்லாவிட்டால் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழத்தான் செய்யும் என்கின்றனர்.

இந்த சம்பவம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மட்டுமல்ல தமிழகம் எங்கும் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளின் நிலைமை இதுதான். பள்ளிக்கல்வித்துறை.... தமிழக அரசு இனியாவது விழித்துக் கொள்ளுமா...? இல்லை விடியல் ஆட்சி இன்னும் விடியாமல் தான் இருக்குமா....?