மாவட்ட கல்வி அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. - பள்ளிக்கல்வி கமிஷனர்*

 மாவட்ட கல்வி அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. - பள்ளிக்கல்வி கமிஷனர்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 'ஆப்சென்ட்' இல்லாமல், அனைத்து மாணவர்களையும் பங்கேற்க வைக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சி.இ.ஓ., - டி.இ.ஓ.,க்களின் ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.

இதில், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறை, தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பொதுத் தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைக்கும் முயற்சி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

பிளஸ் 1 பொதுத் தேர்வை அடுத்த ஆண்டில் தொடர்வது குறித்து, சி.இ.ஓ.,க்களின் கருத்துகளை தனியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பேசியதாவது:

பள்ளிக் கல்வித் துறைக்காக, தமிழக அரசு அறிவித்துள்ள பெரும்பாலான திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை செயல்படுத்தி விட்டோம். மீதமுள்ள திட்டங்களையும், மாணவர்களுக்கு பயனுள்ள முறையில், அமல்படுத்த வேண்டும்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள, அனைத்து மாணவர்களும், ஆப்சென்ட் இல்லாமல், தேர்வில் பங்கேற்க உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அமைச்சர் பேசியதாக, பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார், சி.இ.ஓ.,க்கள் மத்தியில் பேசுகையில், ''பல மாவட்ட கல்வி அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. பிளஸ் 2 பொதுத் தேர்வில் இடைநிற்றலான மாணவர்களின் முகவரிகளை தந்துள்ளோம். அவர்களை கண்டறிந்து, தேர்வில் பங்கேற்க வைக்க உங்களால் முடியவில்லை,'' என்றார்.