மே முதல் வாரத்தில் 10ம் வகுப்பு -ரிசல்ட் வெளியாக வாய்ப்பு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்த பணிகளை, மே, 4க்குள் முடிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு, ஏப்., 6ல் துவங்குகிறது. இந்த தேர்வில், 4.74 லட்சம் மாணவர்கள், 4.63 லட்சம் மாணவியர் என, மொத்தம், 9.37 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.
இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வுக்கான செய்முறை தேர்வு, கடந்த, 20ம் தேதி முதல், 28ம் தேதி வரை நடந்தது. இதில், 30 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வுக்கு வராதது தெரிய வந்தது. அவர்களை, செய்முறை தேர்வில் பங்கேற்க வைக்க முயற்சி நடக்கிறது. இதற்காக, செய்முறை தேர்வுக்கு, இரண்டு நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
அரசு தேர்வுத்துறை, '10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் ஏப்.,25ல் துவங்கி, மே, 3 வரை நடக்கும். மதிப்பெண் பட்டியல், மே, 4ல், தேர்வுத்துறையின் ஆன்லைன் பக்கத்தில் பதிவேற்றப்படும்' என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதனால், மே மாதம் முதல் வாரத்திலேயே, 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.