16 வகை மாற்றங்களுடன் டிரைவிங் லைசென்ஸ்.. தமிழ்நாட்டில் விரைவில் அமலாகும் ....

16 வகை மாற்றங்களுடன் டிரைவிங் லைசென்ஸ்..  தமிழ்நாட்டில் விரைவில் அமலாகும் ....

வாகன ஓட்டுநர் உரிமம் புதிய வகை மாற்றங்களுடன் தமிழகம் முழுவதும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் வாகன ஓட்டுநர் உரிமம், வாகன ரிஜிஸ்டிரேஷன் சான்று ஆகியவை ஒரே மாதிரியாக வழங்கப்படும் என மத்திய அரசு 2019ஆம் ஆண்டு அறிவித்தது. அதன்படி 12 சரகங்களாக செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 91 வட்டார போக்குவரத்து அலுவலகம், 54 பகுதி அலுவலகங்களில் புதிய வகை ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சென்னை, சோழிங்கநல்லூர் ஆர்டிஓ அலுவலகத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து சேலம், வேலூர் சரகத்தை அடுத்து திருப்பூர் சரகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. சேலம் சரகத்தில் கடந்த 11 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை 11 அலுவலகங்களில் மொத்தம் 2,063 புதிய வகை ஸ்மார்ட் கார்டு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது இந்த உரிமத்தில் தமிழ்நாடு அரசு என்பதை TN என்ற ஒரு வட்டத்திற்குள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் பொன்னிறத்தில் பொறிக்கப்பட்ட அசோக சக்கரம், கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. யூனியன் ஆப் இந்தியா என்பது இந்தியன் யூனியன் டிரைவிங் லைசன்ஸ் என மாற்றப்படும். Issued by Government of Tamilnadu என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பமா? என்பது குறித்து Emergency contact number, உரிமம் பெற்றவரின் கையெழுத்து என 16 வகை மாற்றம் இடம் பெற்றுள்ளது. 

இதே போல் ஆர்.சி. புத்தகத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய வகை மாற்றம் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களில் விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடல் உறுப்பு தானம் குறித்தான கேள்வி இடம் பெற்று இருப்பதற்கான முக்கிய காரணமே அரசு எவ்வளவுதான் கடுமையான சட்டங்களை போட்டு விதிமுறைகளை விதித்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினாலும் இக்கால இளைஞர்கள் யாரும் அதை சரிவர பயன்படுத்துவதாக தெரியவில்லை. 

 தினந்தோறும் நடக்கும் விபத்துகளை பார்த்து கூட அவர்கள் திருந்துவதாக இல்லை. வேண்டும் என்று விபத்தில் சிக்குவதாக தெரிகிறது. இப்படி அநியாயமாக செத்துப் போகிறவர்களின் உடல் உறுப்புக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் யாருக்காவது பயன்படட்டும் என்கிற அரசின் எண்ணம் தான்.