கட்சியிலே இல்லாதவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: கே. பி. முனுசாமி காட்டம்...!

 கட்சியிலே இல்லாதவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: கே. பி. முனுசாமி காட்டம்...!

அதிமுகவின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 106 -வது பிறந்த நாள் விழா எடப்பாடி பழனிசாமி ஆணைக்கினங்க தமிழகம் முழுவதும் எல்லா நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. 

இந்த சூழலில் அவர்கள் 3 பேர் தலைவருக்கு எங்கேயாவது விழா எடுத்து இருக்கிறார்களா.. எதாவது ஒரு கூட்டம் போட்டு இருக்கிறார்களா.. அப்படி இல்லை என்றால் அவர்கள் கட்சியிலேயே இல்லை என்று தான் அர்த்தம் என கே பி முனுசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ மறைவு காரணமாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்படுள்ள நிலையில் இந்த தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இந்ததொகுதியில் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இந்த முறை அதிமுக போட்டியிட இருப்பதாக கூறியது. இதனால் அதிமுக இந்த தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ஓ பன்னீர் செல்வம் தரப்பின் மூவ் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கே பி முனுசாமி கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ மறைவு காரணமாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி அதன் பிறகு முடிவு செய்யப்பட்டு தேர்தல் களத்தில் நாங்கள் நிற்போம். அதிமுகவின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாள் விழா எடப்பாடி பழனிசாமி ஆணைக்கினங்க தமிழகம் முழுவதும் எல்லா நகரங்களிலும் நடைபெற்று வருகிறது.

இப்படி நடைபெற்று கொண்டிருக்கின்ற சூழலில் நீங்கள் கூறும் அந்த 3 பேர் தலைவருக்கு எங்கேயாவது விழா எடுத்து இருக்கிறார்களா.. எதாவது ஒரு கூட்டம் போட்டு இருக்கிறார்களா.. அப்படி இல்லை என்றால் அவர்கள் கட்சியிலேயே இல்லை என்று தான் அர்த்தம். கட்சியில் இல்லாத ஒருவரை பத்திரிகைகளும் ஊடகங்களும்தான் தூக்கி வைக்கிறீர்கள். அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் இயங்குகிறது.

டிடிவி தினகரன் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த காரணத்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் வெளியெற்றப்பட்ட நபர். ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த காலத்தில் கூட ஒரு நாள் கூட அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஜெயலலிதா இறந்த பிறகுதான் தனது சித்தியோடு வந்து இருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு நபர் ஏதோ ஒரு சூழலில் வாக்கு வாங்கியிருக்கிறார். இந்த தேர்தலில் அவர் வாக்கு வாங்குவாரா என்று பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்சை சந்திக்க இருப்பதாக சசிகலா கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த கேபி முனுசாமி கூறியதாவது:- 'சசிகலா கட்சியில் இல்லாத நபர். அவர்கள் அவர்களை காப்பாற்றிக்கொள்ள இதுபோன்ற கருத்துக்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லியிருக்க வேண்டிய இடத்தில் நாங்கள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்..