திருச்செந்தூரில் அண்ணாமலை பாதயாத்திரை ஆரம்பம்.....!
லோக்சபா தேர்தலில் வெற்றி வாகை சூட தமிழக பாஜக களமிறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொடங்கி சென்னை வரை 39 தொகுதிகளிலும் நடைபயணம் செல்ல திட்டமிட்டுள்ளார் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை. சித்திரை முதல்நாள் அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை தொகுதிவாரியாக மக்களை சந்தித்து கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
சித்திரை முதல்நாளில் அண்ணாமலை தொடங்கும் பாதயாத்திரை 117 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் தொகுதிவாரிகளை பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது தேர்தல் நிதி திரட்டுவது உள்ளிட்ட முக்கிய பணிகளை செய்ய அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.2024ஆம் ஆண்டு லோக்சபா பொது தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக அரசு கடந்த 2 முறையும் வெற்றி பெற்று 10 ஆண்டுகாலம் ஆட்சியில் உள்ளது. பாஜகவை வீட்டிற்கு அனுப்ப காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார். இந்த நடைபயணத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
வட இந்தியாவில் பாஜகவிற்கு குறிப்பிடத்தகுந்த வாக்கு சதவிகிதம் இருந்தாலும் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் பாஜகவிற்கு செல்வாக்கு குறைவாகவே உள்ளது. எனவே மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க அந்தந்த மாநில பாஜக தலைவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
தெலுங்கானாவில் மாநில பாஜக தலைவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தனது பாதயாத்திரையை தொடங்கி விட்டார். இதன் காரணமாக தெலுங்கானா மக்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று கூறி வரும் நிலையில் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் டெல்லி தலைமை மெச்சத்தக்க வகையில் வெற்றியை பெற்று வாகை சூட வேண்டும் என்று நினைக்கிறார் அண்ணாமலை. அதற்காக இப்போது முதலே பாஜக தொண்டர்களை தயார்படுத்த ஆரம்பித்து விட்டார்.
அதன் ஒரு பகுதியாகவே 39 தொகுதிகளிலும் பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக கட்சித்தலைமை கிரீன் சிக்னல் கொடுத்து விட்டது. சூரனை சம்ஹாரம் செய்த தலம் திருச்செந்தூர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் இந்த தலத்தில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்குகிறார் அண்ணாமலை.
அண்ணாமலையுடன் 500க்கும் மேற்பட்டோர் நடைபயணத்தில் பங்கேற்பார்கள். ஆங்காங்கே உள்ள கட்சி நிர்வாகிகளும் நடைபயணத்தில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரியும் இரவு நேரத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் அண்ணமாலை தங்குவார் அதற்காக தற்காலிக குடில்களும் அமைக்கப்படும். இந்த நடைபயணத்தின் போது மாணவ மாணவியர்களை சந்தித்து உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே பள்ளி பொதுத்தேர்வுகள் முடிந்த பிறகு ஏப்ரல் 14 ஆம் தேதி தனது நடைபயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் அண்ணாமலை
தமிழகத்தில் தாமரையை மலர வைக்க பகீரத பிரயத்தனம் செய்து வருகிறார் அண்ணாமலை. சட்டசபை தேர்தலின் போது அப்போதய மாநில தலைவர் எல்.முருகன் திருத்தணி தொடங்கி திருச்செந்தூர் வரை 234 தொகுதிகளையும் உள்ளடக்கிய முருகப்பெருமானின் அறுபடை வீடுகளையும் தரிசனம் செய்யும் வகையில் வேல் யாத்திரை நடத்தினார். 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்த பாஜக 4 எம்எல்ஏக்களை சட்டசபைக்குள் அனுப்பியது. அதே பாணியில் நடைபயணத்தை தொடங்கப்போகிறார் அண்ணாமலை. லோக்சபா தேர்தலில் வெற்றி வாகை சூடுமா பாஜக? பார்க்கலாம்.