ஓசூர் கல்குவாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு....!

ஓசூர் கல்குவாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு....!

 ஓசூர் கல்குவாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு. கட்டுமான பணிகள் முடங்கும் அபாயம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் சுமார் 60க்கும் மேற்பட்ட கல் குவாரிகளில் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால் அங்கிருந்து கட்டுமான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, அரசு மற்றும் தனியார் துறையின் கட்டுமான பணிகள் முற்றிலுமாக முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஓசூர் அருகே கொரட்டகிரி கிராமத்தின் வழியாக கல் குவாரி கனரக வாகனங்கள் செல்லுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு கல் குவாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், அந்தப் பகுதி சாலைகளில் கல் குவாரி கனரக வாகனங்கள் சென்றுவர அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. இதனை அடுத்து நேற்று ஜல்லிக்கட்டு ஏற்றி வருவதற்காக லாரிகள் சென்ற நிலையில், கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்து ஊருக்குள் வரவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி முரளி தலைமையில், போலீசார் கிராம மக்களிடம் எவ்வளவு சமாதானம் பேச முயன்றும் பயன் அளிக்கவில்லை. இதனால் தொடர்ந்து அந்த பகுதியில் கல்குவாரி கனரக வாகனங்கள் சென்று வர தடை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓசூர் குவாரி கிரஷர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சம்பங்கி,

கடந்த 20 ஆண்டுகளாக அந்த கிராமத்தின் வழியாக கல்குவாரி கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வந்திருந்தன. கடந்த எட்டு மாதங்களாக கிராம மக்களின் எதிர்ப்பு மற்றும் பல்வேறு போராட்டங்கள் காரணமாக அந்த பகுதி வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது வருவாய் துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மாநில சாலைகளை வழி மறிப்பது தவறு என்றும், போக்குவரத்தை தடுப்பதால் நாடே ஸ்தம்பித்துவிடும் என்பதால், கட்டுமான பணிகளுக்கான தேவையை உணர்ந்து மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் வாகனங்கள் சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென இம்மாதம் 9ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீண்டும் அந்த கிராமத்தில் லாரிகளை இயக்க முற்பட்ட பொழுது மீண்டும் அந்தப் பகுதி கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்து தடுத்து நிறுத்தி உள்ளனர். 

இதன் காரணமாக இன்று குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இதனால் குவாரிகளில் இருந்து ஜல்லி கற்கள் அனுப்புவது உள்ளிட்ட பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்படும். இதற்கு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையில் உரிய தீர்வு ஏற்படுத்தி தரும் வரை இந்த வேலை நிறுத்தம் தொடரும். மேலும் இதே நிலை நீடிக்குமே ஆனால் இந்த கிராமத்திற்கு முன்பு குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சார்பில் போராட்டமும் நடத்தப்படும்.

அங்குள்ள ஆறு குவாரிகளில் தொடர்ந்து சுமார் எட்டு மாத காலம் பணிகள் ஏதும் மேற்கொள்ளாமலே மின் கட்டணம் பல லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இதனால், பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது,...என தெரிவித்தார்.

இதனால் ஓசூர் கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட கல் குவாரிகளில் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்படுவதாலும், 500க்கும் மேற்பட்ட கனரக லாரி வாகனங்கள் இயக்கப்படாமலும், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், கட்டுமான பொருட்கள் கிடைப்பது தட்டுப்பாடு ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் துறை கட்டுமான பணிகள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் குவாரிகளில் பணியாற்றும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

பேட்டி : சம்பங்கி, தலைவர், ஓசூர் குவாரி கிரஷர் சங்கத் தலைவர்.

Hosur Reporter. E. V. Palaniyappan