அதிரடி காட்டும் RTOக்கள்.... அச்சத்தில் தனியார் பள்ளிகள்...!

 அதிரடி  காட்டும் RTOக்கள்.... அச்சத்தில் தனியார் பள்ளிகள்...!?

 போக்குவரத்து ஆணையாளர் 09.11.2022  அன்று அந்தந்த மாவட்ட  போக்குவரத்து அலுவலர்களிடம் நடத்திய  மாதாந்திர கூட்டத்தில் அரசாணை எண் 728 ன் படி அனைத்து பள்ளி வாகனங்களும் Camera & Reverse Sensor  கருவி 15.11.2022 க்குள்  பொருத்தப்பட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான கடிதம் ஒன்றிணையும்  வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் இமெயில் மூலமும் அனுப்பி உள்ளார்கள்.

கடந்த இரண்டு நாட்களாக கடும் மழையின் காரணமாக தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளது. மேலும் கடுமையான மழை தொடர்ந்து கொண்டிருப்பதால் யாராலும் எந்த வேலையும் செய்ய முடியாத சூழ்நிலையில் 15ம் தேதிக்கு இன்னும் ஓரிரு நாட்களே இருக்கின்ற நிலையில் உடனடியாக அனைத்து பள்ளி வாகனங்களுக்கும் Camera & Reverse Sensor  கருவி வைக்க வேண்டும் என்று கடவுளே நினைத்தாலும் முடியாது.

இந்த நிலையில் ஆர்.டி.ஓ.க்களின் இந்த அவசர அறிவிப்பு பள்ளி தாளாளர்களை கடுமையாகவே பாதித்துள்ளது. ஒரு வாகனத்திற்கு இந்த கருவிகள் பொருத்தப்பட வேண்டும் என்றால் அதுவும் RTO சொல்லுகின்ற கம்பெனி கருவியை பொருத்த வேண்டும் என்று சொன்னால் அதற்கு ரூபாய் 10 ஆயிரத்திற்கு மேல் செலவாகும். ஒரு வண்டி வைத்திருந்தால் பரவாயில்லை ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்த பட்சம் ஐந்து வாகனங்கள் முதல் 50 வாகனங்களில் வரை பயன்பாட்டில் உள்ளது இதற்கெல்லாம் இந்த கருவி பொருத்த வேண்டும் என்று சொன்னால் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பள்ளி நிர்வாகிகள் உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அதுவும் ஒரே நாளில் வைக்க வேண்டும் என்று சொன்னால் எந்த நிறுவனத்தை நாடுவது அந்த நிறுவனத்திடம் இந்த கருவிகள் ஸ்டாக் உள்ளதா? இல்லையா? என்று கூட தெரியவில்லை. அப்படியே அவர்கள் ஸ்டாக் வைத்திருந்தாலும் எத்தனை ஆட்களை வைத்து எத்தனை பள்ளி வாகனங்களுக்கு இதை பொருத்த முடியும். இதைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல் ஒரே நாளில் இதை செய்ய வேண்டும் என நிர்பந்தித்தால் யாரால் எதை செய்ய முடியும்.

எனவே இதை உடனடியாக பொருத்த முடியாத சூழ்நிலையில் உள்ளோம் எங்களுக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்று பல பள்ளி நிர்வாகிகள் வேண்டுகின்றனர்.

 இது தொடர்பாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் தமிழக முதலமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர், போக்குவரத்து ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் இந்த கருவி பொருத்துவதற்கு இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும். மேலும் பெரும்பாலான பள்ளி வாகனங்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எப். சி. செய்வதற்கு தயாராகிக் கொண்டுள்ளது. எனவே அந்த தருணத்தில் இதையெல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து அதன் பிறகு வேண்டுமானால் இந்த கருவி இல்லாத வாகனங்களை பரிசோதித்து பொருத்த சொல்லலாம்.  

அதை விட்டுவிட்டு ஒரே  அடியாக ஒரே நேரத்தில் நிறுவ வேண்டும் என்று சொல்வது பள்ளி நிர்வாகிகளை நிர்பந்திப்பது அவர்களை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.    எனவே தமிழக அரசு பள்ளி நிர்வாகிகள் மீது கருணை காட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.