உலகத்துக்கே எரிபொருள் சப்ளை செய்ய போகும் இந்தியா!

 உலகத்துக்கே எரிபொருள் சப்ளை செய்ய போகும் இந்தியா!

உலக நாடுகளுக்கு எல்லாம் எரிபொருள் சப்ளை செய்ய இந்தியா மாஸ்டர் பிளான் ஒன்றை வகுத்துள்ளது.

இந்தியாவில் (India) உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜனை (Green Hydrogen) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி (Export) செய்வதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளுடன் இந்தியா தற்போது பேச ஆரம்பித்துள்ளது.

இந்திய அரசின் வெளியுறவு துறை அதிகாரிகள் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர். நிலக்கரி மற்றும் ஆயில் போன்றவற்றை சார்ந்து இருக்கும் போக்குவரத்து உள்ளிட்ட தொழில்துறைகளுக்கு பசுமை ஹைட்ரஜன் சிறந்ததொரு மாற்றாக இருக்கும் என கருதப்படுகிறது. போக்குவரத்து துறையை பொறுத்தவரையில், இன்னமும் பெட்ரோல் மற்றும் டீசல்தான் முக்கியமான எரிபொருளாக உள்ளது.

ஆனால் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) ஆகிய எரிபொருட்கள் (Fuel) சுற்றுச்சூழலை அதிகமாக மாசுபடுத்துகின்றன. அத்துடன் இந்தியா போன்ற நாடுகளுக்கு பொருளாதார ரீதியிலும் அவை பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. உலகிலேயே கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

இதற்காக இந்தியா செலவிடும் தொகை, பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. மேலும் டெல்லி போன்ற நகரங்களில் வாகனங்களை இயக்குவதற்கு மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் அளவிற்கு காற்று மாசுபாடு பிரச்னை கையை மீறி சென்று கொண்டுள்ளது. எனவே இந்தியாவும் படிப்படியாக மாற்று எரிபொருட்களுக்கு மாற தொடங்கியுள்ளது.

இந்த சூழலில்தான், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களில் இருந்து (Renewable Energy Sources) பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது ஆகும்.

ஏனெனில் பசுமை ஹைட்ரஜனில், கார்பன் டைஆக்ஸைடு உமிழ்வுகள் (Carbon Dioxide Emissions) மிகவும் குறைவாக இருக்கும். அல்லது இருக்கவே இருக்காது. எனவே எதிர்காலத்தில் நமது முக்கியமான ஆற்றல் வளமாக பசுமை ஹைட்ரஜனை உருவாக்கும் இடத்தில் நாம் இருக்கிறோம் என இந்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்தியாவிற்கு சூரிய ஒளி தாராளமாக கிடைக்கிறது. அதிக பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பை இந்த அதிகப்படியான சூரிய ஒளி இந்தியாவிற்கு வழங்கியுள்ளது. எனவே வெகு விரைவிலேயே உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதி செய்யப்படும் என நாம் எதிர்பார்க்கலாம்.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக வெளிநாடுகளை சார்ந்து இருக்கும் நிலையை குறைக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது. எனவே பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை மிகப்பெரிய அளவில் அதிகரிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும்.