மின் வேலியில் சிக்கி உயிரிழந்த 4 வயது ஆண் குட்டி யானை

 மின் வேலியில் சிக்கி உயிரிழந்த 4 வயது ஆண் குட்டி யானை

ஒசூர் ; மின் வேலியில் சிக்கி உயிரிழந்த 4 வயது ஆண் குட்டி யானை உடல் பிரேத பரிசோதனை . வனத்துறையினருக்கு தெரியப்படுத்தாமல் குழி தோண்டி புதைத்த விவசாயி கைது மற்றவர்களுக்கு வலை வீச்சு

ஓசூர் அருகே கடூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி எல்லப்பா (63) என்பவர் தனது நெல் வயலில் காட்டுப்பன்றிகள் போகாமல் தடுக்க சட்ட விரோதமாக மின்சார வேலிகளை அமைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய காட்டு யானைகள் எல்லப்பாவின் நெல் வயல் தோட்டம் அருகே சென்றுள்ளது. அப்போது சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை காட்டுப்பன்றிக்கு அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

இதனைப்பார்த்த விவசாயி எல்லப்பா இதுகுறித்து வனத்துறையினருக்கு தெரியப்படுத்தாமல் தனது மகன்களின் உதவியோடு அருகில் உள்ள விவசாய நிலத்தில் குட்டி யானையின் உடலை குழி தோண்டி புதைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கடூர் கிராம மக்களுக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அப்பகுதியில் கடும் துர்நாற்றமும் வீசியுள்ளது. கிராம மக்கள் மூலம் தகவல் அறிந்த ராயக்கோட்டை வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி தலைமையில் நேற்று அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து குட்டி யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததையும் அதனை விவசாயி எல்லப்பா குழி தோண்டி புதைத்ததையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து வனத்துறையினர் குட்டி யானை புதைக்கப்பட்ட இடத்தை சுற்றி வேலிகளை அமைத்தனர்.

இந்த நிலையில் இன்று மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி தலைமையில் கோவை வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் உதவியுடன் ராயக்கோட்டை வனத்துறையினர் அப்பகுதியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு குட்டி யானையின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் குட்டி யானையின் உடலை அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். விசாரணையில் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை சுமார் 4 முதல் 6 வயது இருக்கும் எனவும், அதன் உடலில் இருந்து தந்தங்கள் எடுக்கப்பட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். நெல் வயலில் மின்சார வேலி அமைத்து குட்டி யானை உயிரிழக்க காரணமாக இருந்ததற்காகவும் யாருக்கும் தெரியாமல் அதனை குழி தோண்டி புதைத்ததற்காகவும் வன உயிரின சட்டத்தின்படி எல்லப்பாவை வனத்துறையினர் கைது செய்தனர்.

இரவோடு இரவாக குட்டியானையின் உடலை விவசாய நிலத்தில் குழி தோண்டி புதைக்க எல்லப்பாவுக்கு உதவியாக இருந்த அவரது மகன்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர். குட்டி யானையின் உடல் அப்பகுதியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. குட்டி யானையின் உடல் தோண்டி எடுக்கப்படுவதை அறிந்த கிராம மக்கள் அப்பகுதியில் குவிந்தனர். போலீசாரும்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர.

B. S. Prakash