அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கூடாது....?!
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர்.
அவை சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.
இதனையடுத்து அமலாக்கத்துறை வழக்கறிஞர் என் ரமேஷ் வாதிட்டதாவது:
நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள், Crl OP 15122/22 மற்றும் Crl OP 13194/2022 முடியும் வரை திரு.செந்தில் பாலாஜி மற்றும் இருவர் மீது விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு எதிராக தடை உத்தரவு பெற்றதனால், மேற்படி இரு வழக்குகளிலும் அமலாக்கத்துறை தரப்பினராக சேர அவசியம் ஏற்பட்டுள்ளது.
வேலைக்காக கொடுத்த இரண்டரை லட்சம் ரூபாயை திரும்ப பெற போராடியவர்கள் தற்போது இந்த வழக்கை பல லட்சம் ரூபாய் செலவழித்து இந்த வழக்கை நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது. இவர்களின் பின்னால் சக்தி மிக்க நபர் இருந்து இந்த வழக்குகளை நடத்துகிறார்கள் என்பதை இந்த நீதிமன்றம் பார்க்க வேண்டும். அதிகாரமிக்க அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி ஒரு புறம். அவர் அங்கம் வகிக்கும் அரசின் காவல் துறை மறுபுறம். இந்த சூழலில், வழக்கின் உண்மைகளை பாரபட்சமின்றி சொல்ல இந்த வழக்குகளில் அமலாக்கத்துறையும் ஒரு தரப்பினராக சேர்க்க வேண்டியது அவசியம்.
புகார் கொடுத்த சகாயராஜன், தான் கொடுத்த புகார் வெறும் மோசடி குற்றம் தொடர்பானது என்பதாலும் சமாதானம் ஆகிவிட்டதாலும், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனு செய்துள்ளார். ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவுகளை சேர்க்க சொல்லி உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது.
இந்த வழக்கில் அரசு ”விரிவான விசாரணை” (Comprehensive) நடத்தி இருக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தன் உத்தரவில் சொல்லியுள்ளதை தவறாக திரித்து, இந்த புகார் தொடர்பாக ஆரம்பத்தில் இருந்து புதிதாக விசாரணை (De-novo) நடத்த உத்திரவிட வேண்டும் என மற்றொரு மனுதாரர் மூலம் கேட்பது ஆபத்தானது. அனுமதிக்க கூடாது.
எனவே செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இரு தரப்பு வாதங்கள் நிறைவடையாததால் வழக்கின் விசாரணையை அக்டோபர் 28ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.