வன்முறைக் காடாகிறதா தமிழகம்...?! ஆட்சி கலைப்புக்கு தயாராகும் திமுக அரசு...?!

 வன்முறைக்   காடாகிறதா தமிழகம்...?!  ஆட்சி கலைப்புக்கு தயாராகும் திமுக அரசு...?!

கோவை மாவட்டத்தைத் தொடர்ந்து, ஈரோடு, ராமநாதபுரம், திண்டுக்கல், சேலம்,  செங்கல்பட்டு மாவட்டங்களிலும், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டும், வாகனங்களை தீ வைத்தும் எரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில், நாடு முழுதும் நடந்த என்.ஐ.ஏ., சோதனையை தொடர்ந்து, தமிழகத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில், நேற்று முன்தினம் பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் வீடு, வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி, தீ வைக்கப்பட்டது.

இதனால், கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 4,000க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஈரோடு, திண்டுக்கல், ராமநாதபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், நேற்று இரண்டாவது நாளாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

Latest Tamil News

தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், ராஜ ராஜேஸ்வரி தெருவைச் சேர்ந்தவர் சீதாராமன், 63; ஆர்.எஸ்.எஸ்., தாம்பரம் பகுதி மாவட்ட தலைவர். நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் துாங்கினார்.

நேற்று அதிகாலை, வீட்டின் வறண்டாவில் பலத்த சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த சீதாராமன் வெளியே வந்து பார்த்துபோது, பெட்ரொல் குண்டு வீசப்பட்டிருந்தது. குடும்பத்தினரும் சேர்ந்து, எரிந்து கொண்டிருந்த தீயை, தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

போலீசார் விரைந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சீதாராமன் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசி, வாகனத்தில் தப்பியது தெரியவந்தது.

* ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி, எஸ்.ஆர்.டி., நகர் பின்புற வீதியைச் சேர்ந்தவர் சிவசேகர், 50; பா.ஜ., முன்னாள் நகர துணை தலைவர். டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.இவருக்கு சொந்தமான மூன்று கார்களை, தன் வீட்டின் முன்புறம் உள்ள காலி இடத்தில் நிறுத்துவது வழக்கம். நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 'மாருதி ஸ்விப்ட்' காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

* திண்டுக்கல், குடை பாறைப்பட்டியைச் சேர்ந்த பா.ஜ., மேற்கு நகர தலைவர் பால்ராஜிக்கு சொந்தமான குடோனில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு புகுந்த மர்ம நபர்கள் தீ வைத்ததில் கார், 5 டூ வீலர்கள் எரிந்து நாசமாகின. மேலும், இரு டூ வீலர்கள் சேதமடைந்தன.தீ வைத்தவர்களை கைது செய்யக் கோரி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் தனபாலன் தலைமையில், 70க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் - -தேனி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.


ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உதவி மருத்துவ நிலைய அலுவலராக பணிபுரிபவர் டாக்டர் மனோஜ்குமார். இவர், கேணிக்கரை, திருவள்ளுவர் தெருவில் கிளினிக் நடத்துகிறார். அதன் மேல்தளத்தில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, 11:15 மணிக்கு டூ வீலரில் வந்த மூன்று பேர், கிளினிக் அருகே நின்ற இவரின் இரு கார்களின் வெளிப்புறத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

அங்கிருந்தவர்கள் பார்த்து கூச்சலிட்டதால் தப்பினர். ராமநாதபுர எஸ்.பி., தங்கதுரை சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார்.இது தொடர்பாக, ராமநாதபுரம், பாசிபட்டறைக்கார தெருவைச் சேர்ந்த முகமது இஸ்காக் ஜின்னா மகன் தீனுல் ஆசிப், 21, என்பவரை பிடித்து கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையில் உள்ள ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராஜன் என்பவரது வீட்டில் நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர்கள் மண்ணெண்ணை பாட்டீல் வீசி தாக்கிய மர்ம நபர்கள் தப்பி சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் சில நாட்களாக நடந்த அசம்பாவித சம்பவங்களை தொடர்ந்து, தலைமை செயலர் இறையன்பு, சட்டம் - ஒழுங்கு நிலவரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, கோவை கலெக்டர் சமீரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர், எஸ்.பி., பத்ரிநாராயணன் உள்ளிட்டோரிடம் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசித்தார்.

கோவையில் அமைதி நிலவ மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டது.கலெக்டர் சமீரன் கூறியதாவது:சட்டம் - ஒழுங்கு தொடர்பாக, 17 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, தலைமை செயலர் தலைமையில் கூட்டம் நடந்தது. கோவையில் சில நாட்களாக நடந்த சம்பவங்கள், தனிப்பட்ட முறையில் நடந்த தாக்குதல் தொடர்பாக ஆய்வு செய்தனர்.

கோவையில் நடந்த ஏழு சம்பவங்களிலும் பொதுமக்களின் உயிருக்கோ, உடமைக்கோ பெரிய அளவில் சேதமில்லை. 'சிசிடிவி' காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பதற்றப்படவோ, அச்சப்படவோ வேண்டியதில்லை.

பொதுமக்கள், அமைப்புகள், வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழுக்கள் அமைத்துள்ளோம். பொதுமக்களுக்கு பதற்றத்தை உருவாக்கும் வகையில், சில சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவுகிறது. எங்கும் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடக்கவில்லை. தனிப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டோர் மீது போலீசார் நடவடிக்கைஎடுப்பர்.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

பா.ஜ., அலுவலகங்கள், பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எழுதிய கடிதத்தை, அக்கட்சியின் துணை தலைவர்கள் கரு.நாகராஜன், திருப்பதி நாராயணன், மாநில செயலர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர், சென்னை தலைமை செயலகத்தில், உள்துறை செயலர் பணிந்திர ரெட்டியிடம் நேற்று வழங்கினர். அதேபோல், தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபுவிடமும் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
அனைத்து சம்பவங்களிலும் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஒவ்வொரு 'சிசிடிவி' கேமரா பதிவுகளாக பார்த்து வருகிறோம். சில வழக்குகளில் குற்றவாளிகளின் அடையாளம் தெரிகிறது; விரைவில் கைது செய்யப்படுவர்.


சமூக வலைதளங்களில், இரு சமூகத்துக்கு இடையே பிரச்னை ஏற்படும் வகையில், தகவல்கள் பரப்பினால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியை சீர்குலைக்கும் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு, குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்படுவர்.

பாதுகாப்பில், 3,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்காலிக சோதனை சாவடிகள், 28 இடங்களில் அமைத்திருக்கிறோம். கூடுதலாக ரோந்து வாகனங்கள் இயக்கப்படுகின்றன. கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினர்.

அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வந்த தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக நடந்து வரும் குண்டுவீச்சு கலாச்சாரம் பெரிய வன்முறைக்கு வித்திடுவது போல் அமைந்துள்ளது.  அதுவும் குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சார்ந்தவர்கள் வீடுகளின் மீது நடந்து வரும் தாக்குதல் என்பது ஆளும் கட்சி மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்ற சில இயக்கங்கள் செய்துவரும் அத்துமீறல் ஆகவே கருதப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற முடியாது என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கூறி வருகின்ற நிலையில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் தமிழகத்தில் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக பாஜக வளர்ந்து வருகிறது.  இதன்  வளர்ச்சியை தடுப்பதற்காக  எதிர்க்கட்சிகள் செய்துவரும் சதி அவர்களுக்கு எதிராகவே முடியும் என்று தெரிகிறது.

இந்நிலையில் இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புகார் அளித்துள்ளார்.  இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடர்ந்தால் தமிழகத்தில் விரைவில் ஆட்சி கலைப்பு நடைபெறும் சாத்தியக்கூறுகளும் தானாக உருவாகி விடும்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தை கை கட்டி வேடிக்கை பார்த்தது போல் தமிழக அரசு இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு வன்முறையாளர்களுக்கு  உறுதுணையாக  இருந்தால் 356 ஆவது பிரிவு தமிழகத்தில்  விரைவில் அமல் படுத்தப் படலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்....!?