முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு மாவட்ட செயலாளர் பதவி திமுகவில் நடக்கும் அதிரடி மாற்றம்

 முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு மாவட்ட செயலாளர் பதவி திமுகவில் நடக்கும் அதிரடி மாற்றம்

ஐந்து சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தருமபுரி மாவட்டத்தில் 2 திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் ஆகிய தொகுதிகளை அடங்கிய கிழக்கு மாவட்டமும் அதன் பொறுப்பாளராக தடங்கம் சுப்பிரமணியும், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய தொகுதிகளை அடங்கிய மேற்கு மாவட்டமும், அதன் பொறுப்பாளராக இன்பசேகரனும் உள்ளனர்..

2021 சட்டமன்ற தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. வேட்பாளராக களமிறங்கிய இரு மாவட்ட செயலாளர்களும் தோல்வியை தழுவினர். இதனால், கட்சித் தலைவர் இருவர் மீது அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீசெல்வம் அவர்களை பொறுப்பு அமைச்சராக தருமபுரிக்கு தலைமை நியமித்துள்ளது. அவரும் வாரத்திற்கு ஒருமுறை தருமபுரியில் முகாமிட்டு கட்சி, அரசு பணிகளை கவனித்து வருகிறார்.

தருமபுரி மாவட்ட திமுகவில் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாகவும், அமைப்பு ரீதியாக மாற்றம் செய்ய திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.  இது ஏற்கனவே செய்த முடிவு என்று சொன்னாலும்  அமைப்பு தேர்தலை காரணம் காட்டி அதை செய்வது நல்லது என்று நினைக்கிறார்.

 அந்த வகையில் தருமபுரி கிழக்கு(தருமபுரி, பென்னாகரம்) தருமபுரி மேற்கு ( அரூர், பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு) என மறுசீரமைப்பு செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் நெருக்கம் காட்டி வரும் தடங்கம் சுப்பிரமணியின் மாவட்ட செயலாளர் பதவி தப்பும் என்றும் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் அமைச்சரின் உதவியாளரை முறைத்துக்கொண்டதால் அவர் மீது அமைச்சர் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனை சரிக்கட்ட பெங்களூருவில் உள்ள அவரது மாமனார் உதவியுடன் தலைமையை சரிகட்ட முயற்சியும் செய்து வருகிறாராம் இன்பசேகரன்.

 ஆனால், செந்தில் பாலாஜி உதவியுடன் திமுகவுக்கு வந்த பழனியப்பனுக்கு அந்த பொறுப்பை வழங்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த மாற்றம் முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு சாதகமானதாக கூறப்படுகிறது. காரணம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு பகுதிகளில் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூக வாக்குகள் கணிசமாக உள்ளதால் அதனை கவரும் வகையிலும், அதிமுகவில் அதே சமூகத்தை சேர்ந்த முல்லைவேந்தனை எதிர்த்து அரசியல் செய்யும் வகையில் இந்த மாற்றம் திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

அது மட்டுமல்ல அதிமுக வில் பலம் வாய்ந்த சக்தியாக கருதப்படும் K.P.அன்பழகனுக்கு ஈடு கொடுக்க பழனியப்ப நாள் முடியுமென்று மு க ஸ்டாலின் நம்புகிறார்.

திமுக உட்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இம்மாத இறுதிக்குள் மாவட்ட செயலாளர் தேர்வு நிறைவடையும் என கூறப்படுகிறது.

 அதில், கடந்த தேர்தலில் சரியாக வேலை செய்யாத மாவட்ட செயலாளர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு புதிய நிர்வாகிகள் பட்டியலை தலைமை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தருமபுரியை பொறுத்தவரையில் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பழனியப்பனுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.