அதிமுக பொதுக்குழு விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பு யாருக்கு சாதகம்...?! யாருக்கு பாதகம்..?!
அதிமுக பொதுக்குழு வழக்கில் மேல்முறையீடு செய்யாமலே பொதுக்குழுவை நடத்த வைக்கும் வழி எடப்பாடி பழனிசாமிக்கு கோர்ட் மூலம் தரப்பட்டுள்ளது. இந்த வழியை எடப்பாடி பயன்படுத்தாமல் தடுக்கும் வகையில் ஓ பன்னீர்செல்வம் சில பணிகளை மும்முரமாக செய்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியலில் எப்போதும் ஆள் பலம்தான் முக்கியம். அதாவது மெஜாரிட்டி வாக்குகளை பெறும் கட்சிகள்தான் ஆட்சி செய்யும். மெஜாரிட்டி எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளவர்களே முதல்வர் ஆக முடியும்.
அப்படித்தான் இந்த அதிமுக பொதுக்குழு வழக்கிலும் ஒரு தீர்ப்பு சொல்லப்பட்டு இருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் இது ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமான தீர்ப்பாக இருக்கலாம்.
ஆனால் உள்ளே எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமான சில அம்சங்கள் உள்ளன. இதன் காரணமாக இப்போது ஓ. பன்னீர்செல்வம் ஆள் திரட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இந்த தீர்ப்புப்படி, எடப்பாடி பழனிசாமி ஜூலை 11ம் தேதி கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லாது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதுவும் செல்லாது. இனி எடப்பாடி தனியாக பொதுக்குழுவை கூட்டவே முடியாது. அதேபோல் ஓ. பன்னீர் செல்வமும் தனியாக பொதுக்குழுவை கூட்ட முடியாது. இருவரும் ஒன்று சேர்ந்து கையெழுத்து போட்டு அறிக்கை விட்டால் தான் கூட்டம் முடியும்.
பொதுக்குழுவை கூட்ட இருவரும் கூட்டாக கையெழுத்து போட வேண்டும். அப்படி இல்லை என்றால் புதிதாக ஒரு ஆணையாளரை நியமித்து அவர் மூலம் தான் கூட்ட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
அதனால் இனி பொதுக்குழுவை கூட்ட நினைத்தால் பொதுக்குழுவில் உள்ள 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவர்கள் கையெழுத்திட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரிடம் கொடுத்தால் 30 நாட்களில் பொதுக்குழு நடத்தப்பட வேண்டும். இதற்காக நீதிமன்றம் ஒரு குழுவை அமைக்கும். அப்படி பொதுக்குழுவை கூட்ட முடியாது என்றால் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதன் அர்த்தம் எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கில் மேல்முறையீட்டிற்கு எல்லாம் செல்ல வேண்டியதே இல்லை. மேல்முறையீடு செல்லாமலே 5ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து அவர்கள் மூலம் பொதுக்குழுவை கூட்ட கோரிக்கை வைக்க சொல்ல வேண்டும். அப்படி செய்தால் அதை ஓ பன்னீர்செல்வம் ஏற்க வேண்டும். அப்படி அவர் ஏற்காத பட்சத்தில் நீதிமன்றம் கூறியுள்ள படி நீதிமன்றம் நியமிக்கும் ஆணையாளர் மூலம் பொதுக்குழு கூட்ட வேண்டும்
இதுதான் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதி கொடுத்து இருக்கும் மறைமுக எஸ்கேப் வழி.
இது எடப்பாடிக்கு சாதகமாக இருப்பதால்.. ஓ பன்னீர்செல்வம் தற்போது நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பொதுக்குழு உறுப்பினர்களை மொத்தமாக தனது பக்கம் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். கிட்டத்தட்ட 1600 பொதுக்குழு உறுப்பினர்களாவது ஓ. பன்னீர் செல்வம் பக்கம் மொத்தமாக வர வேண்டும்.இதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.
இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமல்ல 1.50 கோடி கட்சி தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவும் அமோகமாக இருக்கின்றது. எனவே ஓ. பன்னீர்செல்வம் எவ்வளவு தான் முயற்சித்தாலும் அவரால் பொதுக்குழுவை கூட்டவும் முடியாது கட்சியை கைப்பற்றவும் முடியாது.