திருப்பத்தூர் மாவட்டத்தில் முற்றும் மோதல்; MLA., MP. அடாவடி..

 திருப்பத்தூர் மாவட்டத்தில் முற்றும்  மோதல் MLA., MP. அடாவடி..

பெரும்பள்ளம் சாலை பாலமும், பெரும்பாடுபட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும்....

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.1.75 கோடி செலவில் கடாம்பூர் - உதயேந்திரம் சாலையில் கட்டப்படும் சிறிய மேம்பாலத்துக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்  பூஜை போட்ட விவகாரம் தி.மு.க.வில் இப்போது அனலாய் கொதித்து கொண்டிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஏ.சி.வில்வநாதன். "கல்யாண வீடாக இருந்தால்  மணமகனாகவும் , கருமாதி வீடாக இருந்தால் பிணமகனாவும்" பேசப்பட வேண்டும் என்ற விளம்பர வெறியர் சாரி விளம்பர  பிரியர்  அவர். இப்படித்தான் கலந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரங்கல்துருகம் அருகே பொன்னப்பல்லி என்னும் ஊரில் உடைந்து போன ஏரியை பார்வையிட போனார். தான் பார்வையிடுவதை வீடியோக்களாகவும், போட்டோக்களாகவும் பதிவு செய்ய சொன்னார். இவர் பார்வையிடுவதை கட்சியினர் லைவ்வாக எடுத்துக் கொண்டு இருந்தபோது, அதே கட்சியை சேர்ந்த பட்டியலின நிர்வாகி ஒருவர் எம்.எல்.ஏ.வின் செருப்பை தூக்கிக்கொண்டு போவதை வீடியோவாக எடுத்து வந்து" லைவ்வாக" சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டார். அது அப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் ஒரு வழியாக ஆம்பூர் புறவழி சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பை வைத்து அந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

2011ஆம் ஆண்டு இவரது மகன் அசோக்குமாரை பட்டியலின இளைஞர்கள் சிலர் வீடு புகுந்து இரும்பு ராடால் அடித்து நொறுக்கினர். இப்படி பரபரப்புக்கு எப்போதும் பந்தி வைத்துக் கொண்டிருப்பவர் ஆம்பூர் எம்.எல்.ஏ.வில்வநாதன். சரி இனி விஷயத்துக்கு வருவோம் ...


ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வின் சொந்த ஊரான மிட்டாளம் பேருந்து நிழற்கூடம் அருகே உள்ளது பெரும்பள்ளம். கடாம்பூர் - உதயேந்திரம் நெடுஞ்சாலையில் உள்ள இந்த பகுதியில் மழைக்காலங்களில் கானாற்று தண்ணீர் வந்தால் சாலையை கடப்பது சிரமமாக இருக்கும். கண்மாய் வைத்த மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. ஒரு வழியாக இப்போது அதற்கு நேரம் கூடி வர, அந்த மேம்பாலம் கட்டும் பணிக்கான ஒப்பந்தத்தை வாணியம்பாடி அருகே உள்ள கணவாய் புதூர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் எடுத்து உள்ளார். இவர் ஏற்கனவே இதே தொகுதியில் பார்சனாபல்லி, கதவாளம் போன்ற பகுதிகளிலும் இதுபோன்ற பாலங்களைக் கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினரை பொறுத்தவரை அது ரூ.3 இலட்சம் செலவில் போடப்படும் சிமெண்ட் சாலையாக இருந்தாலும் சரி, ரூ.30 லட்சம் செலவில் கட்டப்படும் மின் மயானம் அமைக்கும் பணியாக இருந்தாலும் சரி அதற்கு பூஜை போடுவது என ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய சொல்லி சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், ஒப்பந்ததாரர்களையும் தொல்லை கொடுப்பார். அவர் பூஜை போடுவதை பல்வேறு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய சொல்லுவார்.

மிட்டாளம் பேருந்து நிழற்கூடம் அருகே கட்டப்படும் பாலத்துக்கு பூமி பூஜை போட சொல்லி சம்பந்தப்பட்டவர்களிடம் கூறியுள்ளது  எம். எல்.ஏ.வில்வநாதன் தரப்பு.பூஜைக்கு  எல்லாம் ஏற்பாடு செய்த பின்னர், அதை மற்றொரு நாளுக்கு ஒத்தி வைத்துள்ளார். இரண்டாவது முறையாகவும் ஏற்பாடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகிறார் என்று சொல்லி மூன்றாவது முறையாக ஒருநாள் ஒத்தி வைத்துள்ளார். மூன்றாவது நாளும் அந்த நிகழ்ச்சி நடக்காமல் நான்காவது நாளுக்கு நாள் குறித்து கொடுத்துள்ளார். பாலம் கட்டும் பணியின் பூமி பூஜைக்கு எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், எனக்கு உடல்நிலை சரியில்லை , அதனால் மருத்துவமனைக்கு செல்கிறேன், மாவட்ட தி.மு.க.செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜை வைத்து பூமி பூஜை போட்டுக் கொள்ளுங்கள் என்று மருத்துவமனைக்கு கிளம்பி போய் உள்ளார்.

கடந்த 1.7.2022 அன்று பாலம் கட்டும் வேலைக்கு பூமி பூஜை போட மாவட்ட செயலாளர் தேவராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூர்யகுமார்,  ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார், " பொத்தல் ரோடு" சீனிவாசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் என படை பரிவாரங்களோடு வந்த தேவராஜ் பூமி பூஜை போட்டு விட்டு கிளம்பிப் போய் உள்ளார். அதுவரை அமைதியாக போய்க்கொண்டிருந்த விவகாரம், அதற்குப் பின்னர் தான் அனலாய் சூடு பிடித்து கொதிக்க ஆரம்பித்துள்ளது.

மாவட்ட தி.மு.க.செயலாளர் தேவராஜூக்கும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்துக்கும்( இவர் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின் மகன்) எப்போதும் ஆகவே ஆகாது. எலியும் பூனையுமாய் அன்றாடம் பகையை வளர்த்துக் கொண்டு இருப்பவர்கள். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள , மிட்டாளம் ஊராட்சியில் நடக்கின்ற நெடுஞ்சாலை துறையின் பூமி பூஜைக்கு இன்னொரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தேவராஜை எப்படி அழைத்த வரலாம் என எம்.பி. கதிர் ஆனந்த் தரப்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேள்வி கேட்டுள்ளது. கேள்வி கேட்டதோடு அல்லாமல், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூலம், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு , தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரை இந்த விவகாரத்தை கொண்டு போய் உள்ளது. வேலூர் எம்.பி.கதிர் ஆனந்திடம் "தேவராஜ் மாவட்ட தி.மு.க.செயலாளர் என்பதாலும், ஆம்பூர் எம்.எல்.ஏ. சொன்னதாலும் அழைப்பு விடுத்தோம்" என கூறி இருக்கின்றனர் நெடுஞ்சாலை துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள். "அது என்ன கட்சி நிகழ்ச்சியா, அவரை அழைத்து நீங்கள் நடத்த, அரசு நிகழ்ச்சிக்கு எப்படி அழைக்கலாம்"  என கேட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரை போய் தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு, தலையைப் பிய்த்துக் கொண்டு நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள் திரும்பி வந்ததாக பேசப்படும் செய்திதான் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இப்போது " ஹாட் டாபிக்காக" ஓடிக்கொண்டிருக்கிறது. 

இதுகுறித்து நெடுஞ்சாலை துறையின் பெயர் கூற விரும்பாத ஒரு உயர் அதிகாரி கூறுகையில் " இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன்தான். மாவட்ட தி.மு.க. செயலாளர் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி, தனது மகன் பிரபாகரனை ஒன்றிய செயலாளர் ஆக்க வேண்டும் என்ற கட்சி பணி என சுற்றிக் கொண்டிருந்தார். தேவையில்லாமல் அவருக்கும், எங்கள் துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கும் கெட்ட பெயரை வாங்கி தந்துவிட்டார்" என புலம்பினார்.

பெரியவரிகம் பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில் " சம்பந்தப்பட்ட அந்த பாலம் கட்டும் பகுதி எங்கள் ஊராட்சியின் எல்லைக்குள் வருகிறது. எம்.எல்.ஏ.தரப்பு எங்கள் யாருக்கும் அழைப்பு விடவில்லை.அதேபோல் எங்கள் பெரியவரிகம் ஊராட்சி எல்லைக்குள் குட்டகந்தூர் பஸ் ஸ்டாப் அருகே முறையாக அனுமதிகள் பெறாமல் , பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள வீட்டுமனைகள் எம்.எல்.ஏ. தரப்பின் ஆசியோடு விற்பனையாக தயாராகி வருகின்றன, வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் தரப்பு இதையும் உரிய அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறினார்.

நல்லா சொல்றாங்கய்யா டீடெயிலு .....

- தீரன் வீரபத்ரன்