Google Pay, Paytm வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு...! SBI எச்சரிக்கை!

 Google Pay, Paytm  வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு...! SBI எச்சரிக்கை....!

நீங்களொரு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளராக இல்லை என்றாலும் கூட "இது" உங்களுக்கும் பொருத்தும்.

ஏனெனில் எஸ்பிஐ வெளியிட்டுள்ள செக்யூரிட்டி தொடர்பான இந்த எச்சரிக்கை ஆனது எஸ்பிஐ வங்கி பயனாளர்களுக்கானது மட்டுமல்ல Google Pay, Paytm, PhonePe அல்லது பிற UPI ஆப்களை பயன்படுத்தும் அனைவருக்குமானதும் கூட.

UPI எனப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸின் கீழ் நடந்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை ஆனது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதல் முறையாக, ஒரே மாதத்தில் 5 பில்லியனை தாண்டியது.

இந்த ஒரு புள்ளி விவரத்தை வைத்தே, இந்தியாவில் UPI பயன்பாட்டின் "அடர்த்தியை" நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

உப்பு மிளகாய் தடவி மாங்காய் விற்கும் பாட்டி கடையில் இருந்து ஆன்லைன் ஷாப்பிங்கையெல்லாம் தாண்டி P2P டிரான்ஸ்பர்கள் வரை எல்லாமே யுபிஐ வழியாகவே நடக்கிறது. இப்படி பல வகையான நன்மைகளை வழங்கும் யுபிஐ-யில் சில "அசால்ட் ஆன" அபாயங்களும் உள்ளன.

இங்கே.. பணம் பறிபோன சம்பவங்கள் அதிகம்!

யுபிஐ அடிப்படையிலான மோசடிகளால் வாடிக்கையாளர்கள் / யூசர்கள் தங்கள் பேங்க் அக்கவுண்ட்களில் இருந்து பணத்தை இழந்த பல வழக்குகள் இங்கு உள்ளன.

யுபிஐ தொழில்நுட்பமானது Foolproof என்றாலும் கூட, அதாவது நம்பகமானது, தவறாக பயன்படுத்த முடியாதது என்றாலும் கூட அறியாமை மற்றும் இந்த அமைப்பு எப்படி வேலை செய்யும் என்கிற தெளிவான புரிதல் இல்லாத காரணத்தால் சில யூசர்கள் பலிகிடா ஆகின்றனர்.

யுபிஐ தொடர்பான மோசடிகளில் மக்கள் சிக்கிக்கொள்ள கூடாது என்கிற பொதுநல எண்ணத்தின் கீழ் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா , யுபிஐ ஆப்களை பயன்படுத்துபவர்களுக்கு யுபிஐ பாதுகாப்பு தொடர்பான சில அறிவுரைகளை மற்றும் எச்சரிக்கைகளை வழங்கி உள்ளது.

யுபிஐ பின்-ஐ எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். யுபிஐ பின் என்பது பணத்தை டிரான்ஸ்பர் செய்ய மட்டுமே தேவைப்படும், பணத்தை பெறுவதற்கு அல்ல.

அதாவது யுபிஐ பின் என்பது ஒடிபி (OTP) அல்ல. எனவே உங்கள் யுபிஐ பின்-ஐ எக்காரணத்தை கொண்டும் யாருடனும் பகிர வேண்டாம். மேலும் ஒடிபி உடன் உங்கள் யுபிஐ பின்-ஐ குழப்பிக் கொள்ள வேண்டாம்.

யுபிஐ மோசடிகள் வழியாக, தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை இழந்த பலரும் செய்த பொதுவான தவறு இதுவாகும்.

நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்ளவும், க்யூஆர் கோட் ஸ்கேனர் (QR Code Scanner) பண பரிமாற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

அதில் உங்களுக்கு சந்தேகம் எழும் பட்சத்தில், எந்த காரணங்களுக்காவும் எந்தவொரு ஒரு க்யூஆர் கோட் ஸ்கேனரையும் ஸ்கேன் செய்ய வேண்டாம்.

புகார் எண் அல்லது Consumer redressal number போன்றவைகளை கூகுளில் அணுக கிடைக்கும் ஏதோவொரு இணையதளத்தில் நீங்கள் தேடவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும். எப்போதுமே அதிகாரப்பூர்வ ஆதாரங்களை தவிர வேறு எந்த Source-களிலிருந்தும் புகார் எண்களை தேட வேண்டாம்.

போலியான வலைத்தளத்தில் இருந்து கிடைக்கும் போலியான எண்ணிற்கு அழைப்பு விடுத்தது, புதியதொரு மோசடியில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.

ஒருவேளை உங்களுக்கு பணம் செலுத்துவதில் அல்லது பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால் அல்லது ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு நடந்தால், குறிப்பிட்ட ஆப்பின் ஹெல்ப் செக்ஷனை (Help section) அணுகவும்.

ஹெல்ப் செக்ஷன் வழியாக உங்களுக்கு தெளிவு கிடைக்கவில்லை என்றால், கூடுதல் தகவல்களுக்கு DigiSaathi 24x7 ஹெல்ப்லைனை அணுகவும். அறியாதோர்களுக்கு DigiSaathi என்பது ஒரு ஆட்டோமேடட் ரெஸ்பான்ஸ் சப்போர்டட் சிஸ்டம் ஆகும்.

இது நிதி, வங்கி, டிஜிட்டல் பேமண்ட் ப்ராடெக்ட் மற்றும் கார்ட்ஸ் (கிரெடிட், டெபிட் மற்றும் ப்ரீபெய்ட்), மற்றும் நெட்பேங்கிங் பேமண்ட்ஸ் (UPI, NEFT, RTGS, IMPS, AePS, NETC, BBPS, USSD, ATM, QR Code) போன்ற சேவைகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு தீர்வளிக்கும் தளமாகும்.

கடைசியாக.. எதை மறந்தாலும் இதை மறக்க கூடாது!

யுபிஐ வழியாக நீங்கள் யாருக்கு பணம் அனுப்பினாலும் சரி, குறிப்பிட்ட நபரின் மொபைல் எண், பெயர் மற்றும் UPI ஐடி ஆகியவற்றை - ஒன்றுக்கு இரண்டு முறை - நன்றாக சரிபார்த்த பின்னர், பணத்தை அனுப்பவும்.

பணம் திருடுபவர்களும், அதற்கு அவர்கள் பயன்படுத்தும் வழிமுறைகளும், உருவாக்கும் திட்டங்களும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போவதால், நம்மை நாமே தான் பார்த்துக்கொள்ள வேண்டும்; பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.