10 ரூபாய் நாணயத்திற்கு கார் வாங்கிய பள்ளி நிர்வாகி

 10 ரூபாய் நாணயத்திற்கு கார் வாங்கிய பள்ளி நிர்வாகி


10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா? செல்லாதா? என்ற கேள்வி இன்றும் பலதரப்பினரிடையே இருந்து கொண்டு தான் உள்ளது. ரிசர்வ் வங்கி இது குறித்தான தெளிவான விளக்கத்தினை கொடுத்திருந்தாலும், இன்றும் சில இடங்களில் வாங்கப்படுவதில்லை எனலாம்.

அப்படி ஒரு நிகழ்வுதான் தருமபுரி மாவட்டத்தில் நடந்துள்ளது,  அரூரை சேர்ந்த ரவி என்பவரின் மகன் வெற்றிவேல்.

இவர் மழலையர் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். இது தவிர நாட்டு வைத்தியமும் செய்து வருவதாக கூறப்படுகிறது.

வெற்றிவேல் தான் வசித்து வரும் பகுதியில் 10 ரூபாய் நணயங்களை செல்லாது என சிறுவர்கள் விளையாட்டு பொருளாக பயன்படுத்தி வந்ததை கவனித்து வந்துள்ளார். இந்த நாணயத்தினை அனைவரையும் பயன்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அதனை சிறிது சிறிதாக சேர்த்து வைக்க தொடங்கியுள்ளார். அது மட்டும் அல்ல, சேர்த்து வைத்த காசினை வைத்து ஒரு காரினையும் வாங்க திட்டமிட்டுள்ளார்.

ரூ.10 நாணயங்கள் சேகரிப்பு

இதற்காக பலதரப்பில் இருந்தும் 10 ரூபாய் நாணயங்களை சேகரிக்க தொடங்கியுள்ளார். குறிப்பாக கடைகள், வணிக வளாகங்கள், கோவில்கள், சாலையோர கடைகள் என பல இடங்களில் இருந்து காயின்களை வாங்கி சேகரித்துள்ளார். இந்த காயின்களை மூட்டையாக கட்டிக் கொண்டு, சேலத்தில் உள்ள கார் ஷோரூம் ஒன்றிற்கும் சென்றுள்ளார்.

செய்வதறியாது திகைத்த கார் ஷோரூம் அதிகரிகளும் வங்கி மேலதிகாரிகளுடன் கலாந்தாலோசித்து, அதன் பின்னரே வாங்க முன் வந்துள்ளனர்.

இந்த 10 ரூபாய் நாணயங்களை மூட்டைகளாக கட்டிக் கொண்டு, சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து, வாகன ஷோரூமில் தனது உறவினர்களுடன் வந்து கொட்டியுள்ளார் வெற்றி வேல்.

இது 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று கூறி வரும் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே, இப்படி 10 ரூபாய் நாணயத்தினை கொடுத்து கார் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார் வெற்றிவேல். இது நிச்சயம் பொதுமக்களிடையே 10 ரூபாய் நாணயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

 வெற்றிவேல் , முழுக்க முழுக்க 10 ரூபாய் நாணயங்களை மட்டுமே வைத்து ஒரு புதிய மாருதி காரை வாங்கியுள்ளார். மொத்தம் 60,000 காயின்களை வைத்து இந்தக் காரை அவர் வாங்கியிருக்கிறார். இது மாருதி ஈகோ கார். இதன் விலை ரூ.6 லட்சம்.

இதுகுறித்து வெற்றிவேல் கூறும்போது, “தருமபுரி மாவட்டம் அரூரில் என் அம்மா மளிகை கடை வைத்துள்ளார். அந்த கடையில் கிடைத்த நாணயங்களை சேமித்து வைத்து இந்த காரை வாங்கியிருக்கிறோம். நிறையப் பேர் இந்த 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். சில வங்கிகள் கூட இவற்றை வாங்கத் தயங்குகின்றனர். இந்த நாணயங்கள் செல்லாது என்று கூறி சிறுவர்கள் இதை வைத்து விளையாட்டுப் பொருள் போல விளையாடுகின்றனர். இதுபற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இவரிடம் 6 லட்சத்திற்கு 10 ரூபாய் நாணயங்களை வாங்கிக்கொண்டு காரை டெலிவரி செய்த நிறுவனம் இப்போது அதை வங்கியில் டெபாசிட் செய்ய இயலாமல் தவிர்த்து வருவது வேடிக்கையாக விந்தையாக இருக்கிறது.