ஐந்து தாயை காப்பாற்ற தவறினால் நாடு முன்னேறாது. தமிழ் மொழி பற்றை வலியுறுத்த வேண்டும்.-ஓசூரில் மதுரை ஆதீனம் பேச்சு.

 ஐந்து தாயை காப்பாற்ற தவறினால் நாடு முன்னேறாது. தமிழ் மொழி பற்றை வலியுறுத்த வேண்டும்.-ஓசூரில் மதுரை ஆதீனம் பேச்சு.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் ராமலிங்க அடிகளார் பிறந்து 200வது ஆண்டை கொண்டாடும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. 

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். மேலும் தொடர்ந்து திருவருட்பா தேவாரப் பாடல்கள் அறக்கட்டளை குழுவினரால் பாடப்பட்டது. 

இதைத் தொடர்ந்து மதுரை ஆதீனம் பேசும் போது, தாய்மொழி பற்றை வலியுறுத்த வேண்டும். வெள்ளைக்காரன் நாட்டை விட்டு சென்ற பின்பும் ஆங்கிலம் செல்லவில்லை. தமிழ் மொழிக்காக பலர் உயிரை விட்டுள்ளனர். அதேபோல தமிழ் மொழியை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியவர் வள்ளலார். அமுதினும் இனிது தமிழ் மொழி. உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு, தமிழ் மொழிக்கு மட்டும் தான் சங்கம் அமைத்திருக்கிறார்கள். 

மதுரை ஆதீனத்திற்கும், வள்ளலாருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 288வது மதுரை ஆதீனத்திடம், அருட்பிரகாச வள்ளலார் தீட்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை ஆதீனத்தில் மட்டும்தான் வள்ளலாருக்கு என்று தனி வழிபாடுகள் நடத்தப்படுகிறது.   

வள்ளலார் அருளிய திரு அருட்பா மனித குலத்துக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். எனவே, திருவருட்பாவை அனைவரும் படிக்க வேண்டும். இப்போது வரை புலால் (இறைச்சி உணவு) உண்டு வந்தாலும் நாளை முதல் உண்ண வேண்டாம். எத்தனை நுாற்றாண்டுகள் கடந்தாலும் ஆன்மிகம் இருக்கும். மற்றவை அழிந்து விடும்.   

ஐந்து தாய்களை காப்பாற்ற வேண்டும். அது பாரத தாய், பசு தாய், பெற்ற தாய், பூமி தாய், தமிழ் தாய் என்ற 5 தாய்களை காப்பாற்ற. தவறினால் நாடு முன்னேறாது என பேசினார்.  

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஓசூர்  செய்தியாளர்: E V  பழனியப்பன்