பள்ளிக்கல்வித் துறையின் அராஜகம்....! RTE மாணவர் சேர்க்கையில் குளறுபடி....?!
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் இலவசமாக சேர அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்ட வருகிறது.
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேருகின்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது.
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின்படி ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் இலவசமாக சேர அனுமதிக்கப்படுகிறார்கள். பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் இடங்கள் ஒதுக்கப்படுகின்றது. அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மட்டும் அரசு ஏற்கிறது.
பிற கட்டணங்கள் ஆன பள்ளி சீருடை, பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், பள்ளிக்கு வந்து செல்வதற்கான வாகன கட்டணம் ஆகியவற்றை பெற்றோர்கள் தான் செலுத்த வேண்டும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேருகின்ற மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 2019-2020 கல்வியாண்டில் ஒதுக்கப்பட்ட 1,24,859 இடங்களில் 76, 927 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
2020-2021ம் கல்வியாண்டில் ஒதுக்கப்பட்ட 1,15,603 இடங்களில்் 70, 379 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 2021-2022ம் கல்வியாண்டில் ஒதுக்கப்பட்ட 1, 07, 874இடங்களில் 56, 687 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவது நேர்மறையான போக்கு இல்லை .
தொடக்கத்தில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்த நிலையில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு காரணம்
தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில் முழு எண்ணிக்கையில் மாணவர்களை சேர்க்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அனுமதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இது உண்மையும் கூட.
ஆண்டுதோறும் அதிகாரிகள் திட்டமிட்டு மாணவர் சேர்க்கையை குறைப்பதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இதன் காரணமாகவே ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை குறைவதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்கிற கருத்தை தெரிவிக்கின்றனர். இது முற்றிலும் தவறான கருத்து.
தனியார் பள்ளிகள் இலவசமாக சேர்த்தாலும், பின்னர் பிள்ளைகளின் கல்வியை காரணம் காட்டி பெற்றோர்களிடம் பணம் கேட்பதால் பெற்றோர்கள் மத்தியில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு ஆர்வம் குறைந்து வருவதாக தெரிவிக்கின்றனர். இது கூட தவறான திசைதிருப்பல் தான்.
இப்படி பல்வேறு பொய்களைச் சொல்லி வேண்டுமென்றே வருடம் தோறும் இந்த திட்டத்தில் சேருகின்ற மாணவர்கள் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர் இதற்கு முக்கியமான காரணமே வேறு.
இந்த திட்டம் வந்த பிறகு அரசு பள்ளிகளில் துவக்க நிலை வகுப்புகளில் சேருகின்ற மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது தான் முக்கியமான காரணம். வருடத்திற்கு ஒரு லட்சம் பேர், இரண்டு லட்சம் பேர் என்று இந்த திட்டத்தில் சேர்ந்து விட்டால் காலப்போக்கில் அரசுப் பள்ளிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள் என்பதாலேயே இந்த திட்டத்தை முடக்குவதற்காக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு செயலாற்றி வருகின்றது.
கடந்த காலங்களை விட தற்போது மக்கள் மத்தியில் இத்திட்டம் குறித்த விரிவான விழிப்புணர்வு வந்துள்ளது. தங்களுக்கு பிடித்த தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் எப்போது உங்கள் பள்ளியில் இந்த திட்டத்தில் மாணவர்களை சேர்க்கிறார்கள் என்று விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையை வைத்து பார்க்கும் போது கடந்த காலங்களை விட வரும் கல்வியாண்டில் இரு மடங்குக்கும் அதிகமான இடங்களை ஒதுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் இதை பெற்றோர்களுக்கு ஆர்வமில்லை என்று கூறி இத்திட்டத்தை முற்றிலுமாக முடக்குவதற்கான பணிகளை வேகமாக செய்து வருகின்றனர்.
கடந்த கல்வியாண்டை காட்டிலும் இந்த 2022 - 23 ஆம் கல்வியாண்டில் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கப்பட்ட Intake Capacityஐ 75 சதவிகிதம் அளவிற்கு குறைத்துள்ளார்கள். அதாவது 30 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்த இடத்தில் 8 மாணவர்கள் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று ஆணையிட்டு உள்ளார்கள்.
காரணம் கேட்டால் இந்த ஆண்டு உங்கள் பள்ளியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தான் இடம் ஒதுக்க முடியும் என்று கூறுகின்றனர்.
இந்த ஆண்டு எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகளை பிப்ரவரி மார்ச் மாதத்தில் தான் தொடங்கினார்கள் அதனாலேயே நிறைய பேர் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க முன்வரவில்லை.
அதுவும் இல்லாமல் இருக்கிற இரண்டு மாதங்களும் ஒழுங்காக பள்ளிகள் நடக்குமா...? நடக்காதா....? என்கிற சந்தேகம் அவர்களுக்கு. அதனாலேயே நிறைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கவில்லை.
ஆனால் வருகின்ற கல்வியாண்டு அப்படி இருக்காது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த கல்வியாண்டில் நிறைய மாணவர்கள் சேருவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. இந்த சூழ்நிலையில் இவ்வளவு பேரை தான் சேர்க்க வேண்டும் என்று விதித்திருப்பது இலவச கட்டாய கல்வி சட்டத்திற்கு முரணானது.
இப்படியெல்லாம் பல்வேறு தில்லுமுல்லுகளை அரங்கேற்றி தான் இத்திட்டத்தில் சேருகின்ற மாணவர்கள் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்து வருகிறார்கள்.
இது ஒருபுறம் என்றால் இன்னொரு புறத்தில் இத்திட்டத்தில் சேர்ந்து தனியார் பள்ளிகளில் படித்து வருகின்ற பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் EMIS Number திருடி அரசுப் பள்ளிகளில் சேர்க்கை செய்து ஏற்கனவே படித்து வருகின்ற மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைத்து விட்டார்கள்.
மொத்தத்தில் அரசு பள்ளிகளையும் அரசு பள்ளி ஆசிரியர்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தமிழக பள்ளிக்கல்வித் துறை செய்துள்ள இந்த செயல் தரமான கல்விக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தை காற்றிலே பறக்கவிட்டு தங்கள் விருப்பத்திற்கு செயல்படும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தன போக்கு என்றுதான் மாறுமோ....?