நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி: சசிகலாவின் எதிர்காலம் என்ன..?!

நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி: சசிகலாவின் எதிர்காலம் என்ன..?!

சட்ட ரீதியாக அதிமுகவில் இணைய வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், சசிகலாவின் அரசியல் எதிர்காலம் கேள்வி குறியாக மாறிவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.. அப்படியானால் சசிகலா அடுத்து என்ன செய்ய போகிறார்?

பொதுச்செயலாளர் பதவி குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுகவுக்கு சாதகமாகி உள்ளது.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் இந்த தீர்ப்பை வரவேற்று பேசினர்.. மேலும், சசிகலா இதோடு அரசியலிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்றும் அதிமுக சீனியர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் சசிகலாவோ இந்த தீர்ப்பு குறித்து சென்னை ஹைகோரட்டில் அப்பீலுக்கு செல்வோம் என்று கூறியுள்ளார்.. அத்துடன், தன்னுடைய அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது என்றும், மாவட்டங்களில் தனக்கான ஆதரவு அதிகமாக பெருகி உள்ளதாகவும் கூறுகிறார்.

உண்மையிலேயே சசிகலாவுக்கான ஆதரவு பெருகி உள்ளதா? அல்லது எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு குறைந்துள்ளதா? இருவருமே அடுத்தடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது.. 


குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுதான் சசிகலாவின்  பேச்சாக உள்ளது.. அவர் எங்கு சறுக்கினார் என்று கவனிக்க வேண்டும்.. 

சிறையில் இருந்து வந்ததுமே, அதிரடியை மட்டுமே அவர் கையில் எடுத்திருக்க வேண்டும்.. அதைவிட்டுவிட்டு, ஆடியோ ரிலீஸ் என்ற மெத்தன வழியில் இறங்கிவிட்டார்.. ஒரு ஆடியோ என்றால் பரவாயில்லை.. அடுத்தடுத்த ஆடியோக்கள் வெளிவரவும் அது ஒருவித தொய்வை தந்துவிட்டது.

மேலும், அனைத்து ஆடியோவிலும் ஒரே விதமாகவே பேசிவந்ததும், தொண்டர்களிடம் ஒருவித சலிப்பையும் தந்துவிட்டது.. இந்த தொய்வும், சலிப்பும்தான் எடப்பாடிக்கு முதல் பிளஸ் பாயிண்ட்டாக போய்விட்டது.. 

இதற்கு பிறகு தொண்டர்களை, நிர்வாகிகளை சந்திக்க நேரடியாகவே சுற்றுப்பயணம் கிளம்பி சென்றால் பரவாயில்லை.. ஆனால், அவர் ஆன்மீக சுற்றுப்பயணம் என்று மறைமுகமான பெயரில் தென்மாவட்டங்களுக்கு சென்றது, எடப்பாடிக்கு அடுத்த பிளஸ் ஆகிவிட்டது.

இதற்கு பேசாமல், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை, அமமுகவில் இணைந்து தேர்தலை சசிகலா சந்தித்திருக்க வேண்டும் என்றே சொல்ல தோன்றுகிறது.. அவ்வாறு போட்டியிட்டிருந்தால், குறைந்தபட்சம் 10 சதவீத வாக்குகளையாவது பெற வாய்ப்பு இருந்திருக்கும்.. அதிமுகவுக்கும் ஒரு கிலியை தந்த மாதிரியாக இருந்திருக்கும்..

 அமமுகவை சசிகலாவே புறக்கணித்துவிட்டதுதான் எடப்பாடிக்கு 3வது பிளஸ் ஆகி விட்டது.. இப்போதைக்கு சசிகலாவுக்கு 2 சான்ஸ்தான் உள்ளது..

ஒன்று, அமமுகவுடன் இனியாவது இணைந்து கட்சியை பலப்படுத்துவது.. 

இன்னொன்று ஏற்கனவே  சசிகலாவை நம்பி அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள், அதிருப்திக்கு ஆளானவர்கள் இவர்களை எல்லாம் இணைத்து அமமுகவை சிறப்பாக கொண்டு செல்லலாம்.. 

அல்லது அப்பீல் என்றெல்லாம் போகாமல், எடப்பாடி பழனிசாமி தரப்புடன் சுமூகமாக பேசி முடித்து கொள்வது.. அல்லது வெளிப்படையாகவே தொண்டர்களை சந்தித்து ஆதரவை பெற வேண்டும்.. 

காரணம், இப்போதைக்கு அதிமுகவின் சீனியர்கள்தான் சசிகலாவின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளதாகவே தெரிகிறது.

ஆக மொத்தம், புலி வருது, புலி வருது கதைதான் சசிகலா விஷயத்திலும் நடந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.. 

இதற்கு பேசாமல், வழக்கு தொடுக்காமல் இருந்திருக்கலாம்.. அல்லது இன்று எடப்பாடி தரப்பு மீது எடுக்கும் சமாதான நடவடிக்கையை அன்றே எடுத்திருக்கலாம்.. எனினும் சசிகலா விஷயத்தில் பாஜக ஆரம்பத்தில் இருந்தே கமுக்கமாக ஒதுங்கி உள்ளதையும், சசிகலா எவ்வளவோ முயற்சித்தும், அதற்கு பிடிகொடுக்காமல் நழுவியதையும், இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.

இப்படி எல்லாம் அரசியல் நோக்கர்கள் பலர் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் நுழைவது என்பது குதிரைக்கொம்பு தான்.
 இன்றைய சூழ்நிலையில் சசிகலாவை நம்பி அதிமுக இல்லை.  யாராக இருந்தாலும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்பதுபோல் ஜெயலலிதா இருக்கிற வரைதான் சசிகலாவிற்கு மரியாதை. அவரே போன பிறகு அந்த மரியாதையை எதிர்பார்ப்பது ரொம்ப கஷ்டம்.
 எல்லாவற்றுக்கும் கணக்கு தீர்க்கும் காலம் என்று ஒன்று உள்ளது. அந்த காலம் இப்போது சசிகலாவிற்கு நெருங்கியுள்ளது.