கிருஷ்ணகிரியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

 கிருஷ்ணகிரியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் 

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை அதிகரித்து வருகிறது இந்த விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் நாடு தழுவிய அளவில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் நலனில் அக்கறை இல்லாமல் செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதில் மாவட்ட துணைத் தலைவர் சேகர் நகர செயலாளர் லலித் ஆண்டனி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்; மூர்த்தி