ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ்....?!

 ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ்....?!

அதற்கும் வழிவகைகள் வந்தாலும் வரலாம். ஏற்கெனவே ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளே அத்தாரிட்டியாக இருந்து, ஆர்டிஓ அலுவலகம் வந்து 8 போட்டுக் காட்டாமலேயே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்றொரு செய்தி ரொம்ப நாட்களுக்கு முன்பு அடிபட்டு வந்தது. இது டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஜாலிதான். ஆனால், அந்த டிரைவிங் பள்ளிகளுக்குச் சொந்தமாக 5 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்றது GO. டிரைவிங் ஸ்கூல்களின் எதிர்ப்புக்குப் பிறகு 4 ஏக்கர்… அப்புறம் 3 ஏக்கர்… பின்பு 2 ஏக்கர்.. ம்ம்ஹூம்.. அதற்கும் எதிர்ப்பு வலுக்க… சிட்டிக்குள் 50 சென்ட் இடம் இருந்தால் போதும் என்றார்கள். இதை ஆன்லைன் டெஸ்ட் ட்ராக்காக இருக்க வேண்டும். இது ஒரு Computer Assisted Test Track. அதாவது, நீங்கள் இங்கே ஓட்டிக் காட்டுவது எல்லாமே கணினியில் ரெக்கார்டு செய்யப்படும் என்பதால்… டிரைவிங் ஸ்கூல் அதிகாரிகள்கூட ஏமாற்ற முடியாது. இதை பைலட் ப்ராஜெக்ட் என்றும் சொல்கிறார்கள்.

நீங்கள் என்னதான் டிரைவிங் ஸ்கூலில் மாதக்கணக்கில் பயிற்சி எடுத்துவிட்டு… ஆர்டிஓ அலுவலர் முன்பு வாகனம் ஓட்டிக் காண்பித்தாலும்… அந்த 2 நிமிடங்களில் ஒரு ஓட்டுநரின் மனநிலையை எப்படி அந்த அலுவலரால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் – ஒரு ஓட்டுநரின் மனநிலை, ஒழுக்கம், டிரைவிங் பண்புகள் என அந்த ஓட்டுநருக்கு மாதக்கணக்கில் பயிற்சி அளிக்கும் டிரைவிங் பள்ளிகளின் இன்ஸ்ட்ரக்டருக்கு நன்றாகவே தெரிந்திருக்குமல்லவா? அதற்காகவே டிரைவிங் ஸ்கூல் அதிகாரிகளிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க அரசு ஆர்டர் போட்டிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், ஆன்லைன் கம்ப்யூட்டர் அசிஸ்டட் ட்ராக், அதற்கு முதல்படியாக இருந்தால் மட்டுமே சாத்தியம். இல்லையென்றால், வண்டியை பேலன்ஸ் பண்ணத் தெரியாதவர்கள்கூட உரிமம் வாங்கும் ஏமாற்று வேலைகள் நடந்தாலும் ஆச்சரியமில்லை. இப்போதைக்கு தமிழ்நாட்டில் 14 RTO–க்களில் இதை அமுல்படுத்தியிருக்கிறது. முதல் கட்டமாக கரூரில் இந்த ஆட்டோமேட்டட் டெஸ்ட் ட்ராக்கில் சோதனை நடத்திப் பார்த்ததில், மேனுவல் டெஸ்ட்டைவிட இது ஒர்க்அவுட் ஆவது தெரிந்திருக்கிறதாகச் சொல்கிறார்கள்.

லைசென்ஸ் ரினியூவல் செய்வது… முகவரி மாற்றம் செய்வது… டூப்ளிகேட் லைசென்ஸ் எடுப்பது… எல்லாம் ஓகே! இதில் ரொம்பவும் எளிமையாகவும், எதிர்ப்பாகவும் பார்க்கப்படுவது LLR எடுப்பதுதான். எளிமையாகப் பார்ப்பவர்கள், புதிதாய் LLR அப்ளை செய்பவர்கள். இதை எதிர்ப்பாகப் பார்ப்பவர்கள் டிரைவிங் ஸ்கூல் ஓனர்கள் மற்றும் போக்குவரத்து சமூகநலக் காப்பாளர்கள்.

இது பற்றி ஒரு டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர், ‘‘ரினியூவல் ஓகே… அட்ரஸ் சேஞ்ச் பண்றது ஓகே… ஆனா LLR–ல்தான் பல சிக்கல் இருக்கப் போகுது. எங்ககிட்ட வந்து ஒருத்தங்க டெஸ்ட் எடுக்கும்போதுதான் அவங்களோட கேரக்டர் பத்தி, டிரைவிங் ஸ்டைல் பத்தித் தெரிஞ்சுக்க முடியும். ஆன்லைனில் இது மாதிரி நடக்கும்போது, கன்னாபின்னானு எல்எல்ஆர் அப்ளிகேஷன்ஸ் குவியும். அப்போ ஆதார் இருந்தா என்ன வேணாலும் பண்ணலாமா! டூப்ளிகேட் லைசென்ஸிலும் இஷ்டத்துக்குத் தொலைச்சுட்டு, இதனால் நிறைய பிரச்னைகள் வரும்!’’ என்று கொந்தளித்தார்.

ஒரு வகையில் அரசின் இந்த முடிவால், பல லட்சம் லிட்டர் பெட்ரோல் பயன்பாடு கட்டுக்குள் வரப் போகிறது. எப்படினு கேட்கிறீங்களா? தமிழ்நாட்டில் 2020–2021 ஆண்டில் 12.2 லட்சம் பேர் LLR–க்கு அப்ளிகேஷன் போட்டு வாங்கியிருக்கிறார்கள். 9.6 லட்சம் பேர் தங்கள் லைசென்ஸை ரினியூவல் செய்திருக்கிறார்கள். இந்த ஆண்டில் முகவரி மாற்றம் செய்தவர்கள் 2.3 லட்சம் பேர். அதாவது மொத்தம் 24 லட்சம் பேர். இனிமேல் 24 லட்சம் பேரும் ஆன்லைனிலேயே அப்ளை செய்து கொள்ளலாம். ஆர்டிஓ ஆபீஸ்க்குப் போக வண்டியை எடுக்கத் தேவையில்லை. அப்படியென்றால், பெட்ரோல் போடத் தேவையில்லைதானே!