தேநீர் அரசியல்: ஆளுநர் மாளிகையை உரசிப்பார்க்கும் தி.மு.க....!?

தேநீர் அரசியல்:  ஆளுநர் மாளிகையை உரசிப்பார்க்கும் தி.மு.க....!?

ஜெயலலிதா காலம் முதல் தமிழகத்தில் தேநீர் விருந்தை முன்வைத்து அவ்வபோது அரசியல் நாடகம் அரங்கேறுவது வழக்கம். இம்முறை தற்போதைய கவர்னர் ரவிக்கும் திமுக அரசுக்கும் தேநீர் விருந்து மோதல் துவங்கியுள்ளது.


தற்போது தமிழக கவர்னராக உள்ள ஆர்.என்.ரவிக்கு முன்பு இருந்த பன்வாரிலாலும், மத்தியில் ஆளும் பா.ஜ., அரசால் நியமிக்கப்பட்டவர். அவரது காலத்தில் தமிழகத்தில் பெரும்பாலும் அதிமுக ஆட்சியில் இருந்தது. அதிமுக.,வின் மத்திய அரசுக்கு சாதகமான அணுகுமுறையால், பன்வாரிலாலுக்கும் அதிமுக அரசுக்கும் பெரிய அளவில் மோதல் போக்கு ஏற்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் மட்டுமே பன்வாரிலால் கவர்னராக இருந்தார். அதுவரை திமுக அரசுக்கும், பன்வாரிலாலுக்கும் ‛ஜெய்ஹிந்த்' பிரச்னை தவிர, வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்படவில்லை.

ஆர்.என்.ரவி கவர்னராக நியமிக்கப்பட்டது முதலே திமுக அரசுக்கும் கவர்னருக்கும் உரசல் ஆரம்பமாகிவிட்டது. நீட் விலக்கு மசோதா உட்பட திமுக அரசு அனுப்பும் மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பாமல், கவர்னர் கிடப்பில் போடுவதாக தொடர்ந்து திமுக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இது பற்றி கவர்னருக்கு கடிதம் எழுதுவதை முதல்வர் ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த பிரச்னை பார்லிமென்டிலும் எதிரொலித்தது. கவர்னரை மாற்ற வேண்டும் என்று திமுக எம்.பி.,க்கள் பார்லிமென்டில் கோஷம் எழுப்புவதும் தொடர்ந்தது. மத்திய பா.ஜ., அரசின் ஆலோசனைகளின்படி தான், கவர்னர் இப்படி செய்கிறார் என்று திமுக அரசு சந்தேகிக்கிறது. மத்திய அரசை நேரடியாக இந்த விவகாரத்தில் குற்றம் சாட்ட முடியாது என்பதால் மறைமுகமாக கவர்னரை விமர்சித்து வருகிறது திமுக.

இந்த விவகாரம் இப்போது தேநீர் விருந்தில் வந்து நின்றுள்ளது. நேற்று (ஏப்.,14) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கவர்னர் அளித்த தேநீர் விருந்தை திமுக புறக்கணித்துள்ளது. ஏன் தேநீர் விருந்தை புறக்கணித்தோம் என்பதை விளக்கி கவர்னருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில், ‛மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், தமிழக சட்டசபையின் மாண்பினையும் கருத்தில் கொண்டு கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பொருத்தமற்றது என்று கருதுவதாக' குறிப்பிட்டிருந்தார்.
தேநீர் விருந்தை வைத்து அரசியல் செய்வது நமது நாட்டிற்கு புதிது அல்ல. 1994 -95ம் ஆண்டு தமிழக கவர்னராக இருந்த சென்னாரெட்டி அளித்த தேநீர் விருந்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்தார். மாநில அதிகாரங்களில் கவர்னர் சென்னாரெட்டி தொடர்ந்து தலையிடுவதாக முதல்வருக்கும் கவர்னருக்கும் உரசல் நீடித்தது.

இது தொடர்பாக இரண்டு முறை பிரதமருக்கும் கடிதம் எழுதியிருந்தார். இதன் காரணமாக கவர்னர் அளித்த தேநீர் விருந்தை ஜெயலலிதா புறக்கணித்தார். அப்போது பரபரப்பாக பேசப்பட்ட இந்த தேநீர் அரசியல் 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.

திமுகவை தொடர்ந்து அதன் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  காங்கிரஸ் கட்சிகள் இந்த தேநீர் விருந்தை  புறக்கணித்துள்ளது.  

இவர்களின் இந்த புறக்கணிப்பை தேநீர் செலவு மிச்சம் என்று பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.  இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் எங்களுக்கு பெட்ரோல் செலவு மிச்சம் என்று கூறியுள்ளார்.

, கவர்னர் ரவி முன்னதாக நாகலாந்தில் கவர்னராக பொறுப்பு வகித்தார். அங்கிருந்து விடைபெற்றே தமிழகத்திற்கு நியமிக்கப்பட்டார். நாகலாந்து கவர்னராக அவர் விடைபெறும் நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்தை பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர். அவருடைய பதவி காலத்தில் கவர்னர் ரவி பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்தார் என்பதால் தேநீர் விருந்தை புறக்கணித்தனர். இப்படி தேநீர் விருந்தை வைத்து அரசியல் நடப்பது தொடர்கிறது.
Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்