ஸ்டாலின் வேண்டாம் என்று சொன்ன எட்டு வழி சாலை மீண்டும் வருகிறதா...?!

ஸ்டாலின் வேண்டாம் என்று சொன்ன எட்டு வழி சாலை மீண்டும் வருகிறதா...?!


சென்னையில் இருந்து சேலத்திற்கு  எட்டு வழிச்சாலை திட்டம் அமைக்க தமிழக அரசு ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. 

சென்னை தாம்பரத்தை அடுத்த படப்பையில் இருந்து சேலத்திற்கு 276.5 கி.மீ நீளத்திற்கு எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதனை செயல்படுத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு  இதற்காக சுமார் 7 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து  சுமார் 6,978 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு  அமைப்புகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது. இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம், 8 வழிச் சாலை திட்டத்தை செயல்படுத்தலாம் என்று தீர்ப்பளித்தது. ஆனாலும் கூட அத்திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட விதம் தவறானது என்பதால், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம்  திரும்ப ஒப்படைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து விவசாயிகளிடம்  நிலங்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன், சென்னை - சேலம் இடையே எட்டு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.  இதன் முதல் கட்டமாக பிகார் மாநிலம் தன்பாத் ஐ.ஐடி வல்லுனர் குழுவைக் கொண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை மத்திய அரசு தயாரித்துள்ளதாகவும், அடுத்தக்கட்டமாக சமூக, பொருளாதார தாக்கம் குறித்து அறிக்கை தயாரித்து அளிக்க கேரள அரசின் கிட்கோ நிறுவனத்தை மத்திய அரசு அமர்த்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த நிறுவனத்தின் சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக அனுமதி தரும்படி தமிழக அரசிடம் அந்நிறுவனம் கோரியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளதாக கூறியுள்ளார். எனவே இந்தநிலையில் சென்னை-சேலம் எட்டு வழி பசுமைச் சாலை தமிழ்நாட்டுக்கு தேவையில்லையென்றும் அது விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் எதிரானது என்பது தான் ஆம்ஆத்மிகட்சியின் நிலைப்பாடு என கூறியுள்ளார். 

மேலும் சென்னையில் இருந்து சேலம் செல்ல ஏற்கனவே 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளதாக தெரிவித்த அவர்,  நான்காவதாக வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி, அயோத்திப்பட்டினம் வழியாக சேலத்திற்கு செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலை 179- ஏ பணிகளும் நிறைவடைந்துள்ளதாக கூறியுள்ளார்.  இத்தகைய சூழலில் ஐந்தாவதாக இந்த சாலை தேவையற்றது என தெரிவித்துள்ளார். எனவே எதிர்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்த திமுக, தற்போது சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். 8 வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், திமுக அரசு இப்போது விவசாயிகளின்  பக்கம் நிற்கப் வேண்டும் என்றும்  மத்திய அரசின் சூழ்ச்சிக்கு துணை போகக்கூடாது  என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு என ஆம் ஆத்மி கட்சி தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தெரிவித்துள்ளார்.