மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை சிறப்பாக செயல்படும் தமிழக அரசுக்கு பாலகுருசாமி பாராட்டு...!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை சிறப்பாக செயல்படும் தமிழக அரசுக்கு பாலகுருசாமி பாராட்டு...!


மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை, தமிழக அரசு படிப்படியாக அமல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது' என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்து உள்ளார்.

அவர் நேற்று விடுத்து உள்ள அறிக்கை: 
திறன் சார்ந்த கல்வியும், பயிற்சியும் பாட திட்டத்தில் கட்டாயமாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இது, மாணவர்கள் தொழில் சார்ந்த படிப்புகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

 தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கைகள், கல்வியாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளன. 'இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன்' போன்ற திட்டங்கள், இளம் மாணவர்கள் கல்வியில் முன்னேற வழி வகுக்கும் திட்டங்கள். 

இந்த திட்டங்கள் எல்லாம், புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள். புதிய கல்வி கொள்கையை எதிர்த்தாலும், மறைமுகமாக அவற்றில் உள்ள முக்கிய பரிந்துரைகளை, தமிழக அரசு அமல்படுத்தி வருவது மிகச் சிறந்த நடவடிக்கை

.தமிழகத்துக்கு என்று, மாநில கல்வி கொள்கை வகுப்பது சிறந்த முடிவு. இது, தேசிய கொள்கையை சார்ந்து இருக்க வேண்டும்.

தேசிய கல்வி கொள்கையானது, விரிவான சிறந்த உள்ளடக்கங்களை கொண்டது. இந்திய மாணவர்கள், 21ம் நுாற்றாண்டின் சவால்களை சந்திக்கும் வகையில், இந்த கொள்கை அமைக்கப்பட்டுள்ளது. 

இதை விட சிறந்த கொள்கையை, இன்னொரு கமிட்டி திட்டமிடுமா என்பது சந்தேகம். மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், பல்கலை மானியக்குழு, தேசிய மருத்துவ கமிஷன் ஆகியவற்றின் விதிகளின்படி, புதிய கல்வி கொள்கையை, மத்திய - மாநில பல்கலை கழகங்கள் அமல்படுத்த வேண்டியது கட்டாயம்.

இதுகுறித்து, அனைத்து பல்கலைகளுக்கும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வேளை நாம் இந்த கொள்கையை முழுமையாக பின்பற்றாவிட்டால், நம் மாணவர்கள் தேசிய கல்வி திட்டங்களில் இருந்து விலகி நிற்க வேண்டியது நேரிடும். தேசிய அளவில் வேலைவாய்ப்பு பெறுவதிலும், கல்வி அங்கீகாரம் பெறுவதிலும், பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே, புதிய கல்வி கொள்கையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு பாலகுருசாமி கூறியுள்ளார்.