பத்திரிகையாளர்களும் நாட்டின் முதுகெலும்புதான்; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வேண்டுகோள்!
பத்திரிகையாளர்களும் நாட்டின் முதுகெலும்புதான்;பத்திரிகையாளர்களுக்கு எல்லா மாநில அரசுகளும் சலுகைகள், உதவிகள் வழங்க வேண்டும்!
புதுடெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் மாநாட்டில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வேண்டுகோள்!!
இன்றைய நவீன காலத்தில் பத்திரிகையாளர்களும் நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்வதால், அவர்களுக்கு எல்லா மாநில அரசுகளும் சலுகைகள் மற்றும் உதவிகளைச் செய்ய வேண்டும் என்று, புதுடெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் மாநாட்டில் தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்தார்.
பெடரேசன் ஆஃப் பி.டி.ஐ. எம்ப்ளாய்ஸ் யூனியன்ஸ் சார்பில், ஊடகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் அகில இந்திய பத்திரிகையாளர்கள் மாநாடு புதுடெல்லியில் 2 நாட்கள் நடைபெற்றது.
இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் கலந்துகொண்டு பேசினார்.
மாநாட்டில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:
விவசாயிகள் மட்டுமல்ல, இன்றைய நவீன காலத்தில் பத்திரிகையாளர்களும் நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கிறார்கள்.
நகர்புறங்களில் உள்ள பிரச்சினைகளை அலசி ஆராயும் பத்திரிகையாளர்கள், நம் கிராமப்புறங்களை நோக்கியும் வர வேண்டும். கிராமங்களில் ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை பத்திரிகையாளர்கள் வெளிக்கொண்டு வந்து, கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்திட வேண்டும். கிராமப்புறங்கள் வளர்ச்சி பெற்றால், நாடு தானாக உயர்ந்த நிலையை அடைந்துவிடும்.
கடைநிலையில் உள்ள பத்திரிகையாளர்களின் பொருளாதாரம் மேம்பட வேண்டும். அவர்கள் பொருளாதார மேம்பாடு அடைந்தால்தான், தைரியமாக எழுத முடியும். மக்கள் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவர முடியும்.
தமிழகத்தில், முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பத்திரிகையாளர்களுக்கு நிறைய சலுகைகளை வழங்கி வருகிறார். நலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியமாக மாதம்தோறும் 12 ஆயிரம் ரூபாய், எதிர்பாராதவிதமாக பத்திரிகையாளர் இறந்தால், அவரது குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதிஉதவி என்று, நிறைய உதவிகளை செய்து வருகிறார்.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்குவதுபோல், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அந்தந்த மாநில அரசுகள் சலுகைள் மற்றும் உதவிகளைச் செய்ய வேண்டும்.
இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசினார்.
மாநாட்டில் பி.டி.ஐ. ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர் இந்துகாந்த் தீட்சித், பொதுச்செயலாளர் பல்ராம்சிங் தகியா, இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் விக்ரம் ராவ், துணைத் தலைவர் பிரதாப சந்திரன், சென்னை பத்திரிகையாளர் யூனியன் தலைவர் எல்.ஆர்.சங்கர், பொதுச்செயலாளர் மணிமாறன், பத்திரிகையாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் ஜி.பூபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் இளையராஜா