நீலகிரி மாவட்டத்தில் தலைவர் பதவியை கைப்பற்றத் துடிக்கும் திமுக....! தடையாக நிற்கும் காங்கிரஸ்...!!

நீலகிரி மாவட்டத்தில் தலைவர் பதவியை கைப்பற்றத் துடிக்கும் திமுக....!  தடையாக நிற்கும் காங்கிரஸ்...!!


நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக வார்டுகளில் வென்று, 36 ஆண்டுகளுக்குப் பின் உதகை நகராட்சியை திமுக கைப்பற்றுகிறது.

இதற்கிடையே, நகராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டி வருகிறது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரநிதிநிதிகள் நாளை (மார்ச் 2) பொறுப்பேற்கின்றனர். வரும் 4-ம் தேதி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதனால், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மும்முரமாக உள்ளனர். அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், துணைத் தலைவர் பதவிகளைதான் ஆண்கள் பெற முடியும். அதேசமயம், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் திமுக பெரும்பான்மை பெற்றுள்ளதால், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை தக்கவைக்கும் என தெரிகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றன.

உதகை நகராட்சியில் 36 ஆண்டுகளுக்கு பின்னர் தலைவர் பதவியை திமுக வசப்படுத்தும் நிலை உள்ளது. ஆனால், கூட்டணி கட்சியான காங்கிரஸ், தலைவர் பதவியை தங்களுக்கு ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளது. உதகை நகராட்சியில் ஒதுக்கப்பட்ட 7 இடங்களில் 6-ல் வெற்றி பெற்றுள்ளோம். தலைவர் பதவி இல்லாதபட்சத்தில் துணைத் தலைவர் பதவியையாவது காங்கிரஸுக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, உதகை நகராட்சியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர்கள் 6 பேர், மாவட்ட தலைவரும், உதகை எம்எல்ஏ-வுமான ஆ.கணேஷ் தலைமையில் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

இதேபோல, கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுகவின் வெற்றியில் பங்கு வகிக்கும் காங்கிரஸ் கட்சி, தனது பிரதிநிதித்துவத்தை நிலைநாட்ட பெரும் முயற்சி எடுத்து வருகிறது. கூடலூர், நெல்லியாளம் ஆகிய நகராட்சிகள், தேவர்சோலை, ஓவேலி, நடுவட்டம் ஆகிய பேரூராட்சிகளில் பெரும்பான்மை அடிப்படையில் தலைவர் பதவிகளை திமுக பிடித்துவிடும்.

நீலகிரி மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் (1072 வாக்குகள்) பெற்று, கூடலூர் நகராட்சியின் 1-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் வெற்றி பெற்றுள்ளார். அதிக முறை நகராட்சியில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட உஸ்மான், ராஜு ஆகியோரும் உள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூறும்போது, "கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம் வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம். இரண்டு நகராட்சிகள் மற்றும் மூன்று பேரூராட்சிகளின் தலைவர் பதவிகள் திமுகவுக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 2 நகராட்சிகளிலும், 4 பேரூராட்சிகளிலும் துணைத் தலைவர் பதவிகளை வழங்க வேண்டுமென கோரியுள்ளோம். குறைந்தது ஒரு நகராட்சி, பேரூராட்சியில் துணைத் தலைவர் பதவி ஒதுக்க வேண்டும். இதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது" என்றனர்.