பனை மரம் ஏறும் இயந்திரங்கள் கண்டுபிடிப்போருக்கு விருது: ரூபி மனோகரன் வாக்குறுதியை நிறைவேற்றியது தமிழக அரசு!

 பனை மரம் ஏறும் இயந்திரங்கள் கண்டுபிடிப்போருக்கு விருது: ரூபி மனோகரன் வாக்குறுதியை நிறைவேற்றியது தமிழக அரசு!

பனை மரம் ஏறும் இயந்திரங்களை கண்டுபிடிப்போருக்கு  விருது வழங்கப்படும் என்கிற அறிவிப்பின் மூலம், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனின் முக்கியமான தேர்தல் வாக்குறுதி ஒன்றை நிறைவேற்றி இருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் உள்ள பனை மரம் ஏறும் விவசாயப் பெருமக்களின் நலன்கருதி, பனை மரம் ஏறும் இயந்திரம் கண்டுபிடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரூபி மனோகரன் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

அந்தத் தேர்தலில் அபார வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆன ரூபி மனோகரன், பனை மரம் ஏறும் இயந்திரங்கள் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு தமிழக அரசையும், முதல்வரையும் வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவசாய பட்ஜெட்டில், பனை மரம் மற்றும் அதுசார்ந்த தொழில்களை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

குறிப்பாக, பனை மரம் ஏறும் நவீன இயந்திரங்கள் கண்டுபிடிப்போர் ஊக்குவிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு சார்பில் விருதும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, நாங்குநேரி ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் ஆயிரக்கணக்கான பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் உள்ளனர். பனை மரம் ஏறும் தொழில் காலத்துக்கு ஏற்றவாறு நவீனமயத்தை எட்டினால், ஏழைகளாக உள்ள அந்தத் தொழிலாளர்கள் அனைவரும் முதலாளிகள் ஆக மாறிவிடுவார்கள்.

பனை மரம் ஏறும் நவீன இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு, அவை அனைத்து பனை விவசாயிகளிடமும் வந்து சேர்ந்துவிட்டால், பனைத் தொழில் பிரம்மாண்ட வளர்ச்சியை எட்டும். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பொருளாதார வளம் பெறும்.

அத்தகையை நிலையை நோக்கி அடியெடுத்து வைக்கும்விதமாக, தமிழக விவசாய பட்ஜெட்டில் பல நல்ல செய்திகளை பனை விவசாயப் பெருமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

பனை மரம் ஏறும் இயந்திரங்கள் கண்டுபிடிப்போருக்கு விருது வழங்கப்படும் என்கிற அறிவிப்பை நானும், என்னுடைய நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி மக்களும் மனதார வரவேற்கிறோம்.

அதேபோல், பனங்கருப்பட்டி உள்ளிட்ட பனைப் பொருட்களின் விற்பனை சந்தையையும் அரசு சார்பில் நாங்குநேரி தொகுதியில் ஏற்படுத்த தக்க நடவடிக்கை எடுக்கவும் இந்த நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: இளையராஜா