டென்ஷனை குறைக்க சுந்தர் பிச்சை என்ன செய்வார் தெரியுமா.....? உலகளவில் டிரெண்டாகும் டெக்னிக்..!!

டென்ஷனை குறைக்க  சுந்தர் பிச்சை என்ன செய்வார் தெரியுமா.....? உலகளவில் டிரெண்டாகும் டெக்னிக்..!!

உலகின் முன்னணி நிறுவனங்களின் சிஇஓ-க்கள் காலையில் சீக்கிரம் எழுந்து யோகா அல்லது தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர். இதைக் கிட்டதட்ட 90 சதவீதம் பேர் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே இரவில் நேரம் கழித்தும் தூங்கி காலையில் சற்றுத் தாமதமாக எழும் பழக்கத்தைக் கொண்டு உள்ளனர்.

இதில் ஒருவர் தான் நம்ம சுந்தர் பிச்சை. முன்னணி நிறுவனங்களின் சிஇஓ-க்கள் காலையில் 4-5 மணிக்கு எழும் வழக்கத்தைக் கொண்டு இருக்கும் நிலையில் 6-7 மணிக்குத் தான் எழுவார் என அவரைப் பல முறை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சுந்தர் ஸ்ட்ரெஸ் அதாவது மன அழுத்தத்தைக் குறைக்க ஒரு முக்கியமான பழக்கத்தைக் கொண்டு உள்ளதை தற்போது தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட்-ன் சிஇஓவான சுந்தர் பிச்சை இந்த வாரம் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கைக்குக் கொடுத்த பேட்டியில், எனக்குத் தியானம் செய்யும் வழக்கம் இல்லை, அதேபோல் தியானம் செய்வதும் எனக்கு மிகவும் கடினம் என்பதால் அவ்வப்போது யூடியூப்-ல் இருக்கும் 10, 20, 30 நிமிட NSDR போட்காஸ்ட் வீடியோவை பயன்படுத்தி ஒய்வு எடுப்பேன் எனக் கூறியுள்ளார்.

NSDR டெக்னிக்

Non-Sleep Deep Rest என்பதன் சுருக்கம் தான் இந்த NSDR, இந்தப் பெயரை ஸ்டான்ஃபோர்ட் நரம்பியல் (நியூரோ சையின்ஸ்) பேராசிரியர் ஆண்ட்ரூ ஹூபர்மேனால் உருவாக்கினார்.இது 'அமைதியான நிலையைச் சுயமாகத் தூண்டுவது' மற்றும் 'நம் கவனத்தை ஏதோவொன்றின் மீது செலுத்துவதற்குப் பெரிய அளவில் உதவி செய்வதாகக் குறிப்பிடுகிறார்.

NSDR மக்கள் ஓய்வெடுக்கவும், எளிதாகத் தூங்கவும், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கவும், வலியைக் குறைக்கவும், மேலும் கற்றலை துரிதப்படுத்தவும் உதவும். பொதுவாக NSDR-ஐ யோகா நித்ரா மற்றும் ஹிப்னாஸிஸ் மூலம் அடைய முடியும் என ஹூபர்மேன் கூறுகிறார்.

இளைஞர்கள்

சுந்தர் பிச்சையின் பேட்டிக்குப் பின்பு யூடியூப் மற்றும் கூகுள் தளத்தில் NSDR குறித்த தேடல்கள் அதிகரித்துள்ளது. பலர் தங்களது மன அழுத்தத்தைக் குறைக்க இனி NSDR-ஐ பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பல கோடி இந்திய இளைஞர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் சுந்தர் பிச்சை மன அழுத்தத்தைக் குறைக்கப் புதிய யுக்தியை கொடுத்துள்ளார்.