திருவண்ணாமலை கிரிவலத்திற்கு அனுமதி... 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியர் முருகேஷ் அனுமதி...

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு அனுமதி... 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியர் முருகேஷ் அனுமதி...


கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலை மலைச்சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கிரிவலத்திற்கு ஆட்சியர் முருகேஷ் அனுமதி அளித்துள்ளார். இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவபெருமானின் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

இந்த கோயிலுக்கு அருகே உள்ள மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் வருவது வழக்கம்.

ஆனால், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல கடந்த 2 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டது. நோய் தொற்று குறைவு காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கள் விலக்கிக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், கொரோனா தொற்று நடவடிக்கைக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஆட்சியர் முருகேஷ் அனுமதி அளித்துள்ளார்.

அதன்படி, கிரிவலம் வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்தும் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை கிரிவலத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது அனுமதி வழங்கி உள்ளதால் வருகின்ற 17, 18 தேதிகளில் திருவண்ணாமலை களைகட்டும்.