அகில உலகமே கொரோனாவை மறந்து விட்டது. ஆனால் இங்குள்ள ஊடகங்கள் அதை இன்னும் விட்டு விலகுவதாக தெரியவில்லை. இதைவிட கேவலம் என்னவென்று சொன்னால் எதற்கெடுத்தாலும் பள்ளிகளை மூட சொல்லி வலியுறுத்துவதாக அன்றாடம் செய்திகள் வெளியிட்டு வருகிறார்கள். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை உண்டாக்கி வருகிறது.
இன்றைக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது அது என்னவென்று பாருங்கள்......
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை அளித்து பள்ளிகளை மூட வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த காரணத்தால் முதலில் அனைத்து கல்வி நிலையங்களும் மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டது. இதனால் மாணவர்கள் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைன் முறையில் பாடங்களை பயின்று வந்தனர். தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டாலும், அப்போதைய சமயத்தில் அதிக கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வந்த காரணத்தால் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
இதனால் மாணவர்களுக்கு அகமதிப்பீடு முறையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 1 ம் தேதி 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றது. இதனுடன் பிப்ரவரி 16ம் தேதி முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து மிகவும் சீரான முறையில் சென்று வருகின்றது. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கு விரைவில் பாடங்களை முடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் பெற்றோர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த முறையும் தேர்வுகள் நடத்தப்பட வாய்ப்புகள் குறைவு தான். முடிக்க வேண்டிய பாடங்களை ஆன்லைனில் நடத்தி முடிக்கலாம். பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து நேரடி வகுப்புகளை நடத்தலாம். இன்னும் 2 மாதம் தான் நடப்பு கல்வியாண்டு நடக்க இருக்கிறது. அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை புத்துணர்ச்சியுடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பான அரசின் நிலைப்பாடு இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
இப்படி எண்ணற்ற ஊடகங்கள் ஏதேதோ செய்திகளை தினமும் பரப்பி வருகிறது இவற்றையெல்லாம் இனி யாரும் நம்ப வேண்டாம்.
இனி எந்த வித Lockdown இடமில்லை என்று மத்திய அரசு கூறிவிட்டது. எனவே எந்த காரணம் கொண்டும் பள்ளிகளை இழுத்து மூட முடியாது. எனவே உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க பள்ளிகளுக்கு அனுப்புங்கள். விடுமுறையை எதிர்பார்க்காதீர்கள் .