அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறுவோம்.... பிரதமர் மோடி நம்பிக்கை....

அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறுவோம்....  பிரதமர் மோடி நம்பிக்கை....

தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுவதை என்னால் பார்க்க முடிகிறது எனவும், உத்திரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் பெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைகளின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் , அம்மாநிலங்களில் தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து அம்மாநிலங்களில் தேர்தல் வேலைகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உள்ளிடவை வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தற்போது ஆளும் மாநிலங்களின் மீண்டும் ஆட்சியை பிடிக்கவும், ஆட்சியில் இல்லாத மாநில சட்டசபைகளை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் காணொளி காட்சி மூலமும், சமூக வலைதளங்களிலும் பிரச்சாரம் மேர்கொண்டு வருகிறார். இதேபோல் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களின் முதல்வர்களும், அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகிறது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார். குறிப்பாக உத்திரபிரதேசத்தில் அவரது கவனம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனமான ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பிரத்தியேக பேட்டியளித்துள்ளார். அதில் 5 மாநில தேர்தல்களிலும் பாஜக தனிபெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சேவை செய்வதில் பாஜக எப்போதும் ஈடுபட்டுள்ளது என பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு ஆதரவு அலை வீசுவதை என்னால் பார்க்க முடிகிறது எனவும், நாங்கள் பெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் , 5 மாநிலங்களில் உள்ள மக்கள் அவர்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பளிப்பார்கள் என்றார். நாம் முன்பு கூட 'இரண்டு சிறுவர்கள்' விளையாட்டைப் பார்த்தோம், 'குஜராத் கே தோ கதே' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் அளவுக்குத் திமிர் கொண்டிருந்தனர். அவர்களுக்கு உத்திர பிரதேசம் பாடம் புகட்டியது எனவும் கூறினார்.

ஒற்றுமையே உதவும்

எங்கெல்லாம் பாஜகவுக்கு ஸ்திரத்தன்மையுடன் செயல்பட வாய்ப்பு கொடுக்கப்பட்டதோ, அங்கு நீங்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவான சூழலைக் காண்பீர்கள் எனவும், அங்கு ஆளும் கட்சிக்கு எதிரான சூழல்கள் இல்லை என்றார். பாரதிய ஜனதா எப்போதும் மக்களுக்கு ஆதரவாகவே தேர்தலில் செயல்படும் என்ற பிரதமர், தேசத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஒற்றுமையே உதவும் எனவும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற மந்திரத்துடன் செயல்படுவதாகவும் கூறினார்.