சென்னை மாநகரத்திற்கு 3 துணை மேயர்கள்....! நடப்பது என்ன....?

சென்னை மாநகரத்திற்கு 3 துணை மேயர்கள்....! நடப்பது என்ன....?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற்றதைவிட, மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் அதைவிட கஷ்டமாக இருக்கும் என்று தெரிகிறது..

காரணம், முட்டல் மோதல்கள் இப்போதே கவுன்சிலர்களிடம் நடக்க ஆரம்பித்துவிட்டன.

உள்ளாட்சி தேர்தல் முடிந்தாலும் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் வருகிற 4-ந் தேதி நடக்க உள்ளது. உள்ளாட்சி பதவிகளை எட்டிப் பிடிப்பதற்கு திமுகவிலும், அதன் கூட்டணி கட்சியிலும் கடந்த 2 மாத காலமாகவே தீவிர களப்பணியாற்றினார்கள்.

இப்போது 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியுள்ளது. அனைத்து மாநகராட்சியிலும் திமுகவை சேர்ந்தவர்களே மேயராக இருக்க வேண்டும் என்பதில் திமுக தலைமை உறுதியாக உள்ளது.. அதனால், கூட்டணி கட்சியினருக்கு துணை மேயர் பதவிகளை ஒதுக்க திமுக மேலிடம் முடிவு செய்திருந்தது.

கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியோ, துணை மேயர் பதவியை எப்படியாவது கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளது.. காரணம், கோவை மாநகராட்சியில் 9 வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் 9 வார்டிலுமே அபார வெற்றியை பெற்றுள்ளது. அதனால்தான், துணை மேயர் பதவியை பெறும் வகையில், மேலிடத்தில் காய் நகர்த்தி வருகிறார் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி.

அதற்காக அதிமுகவை சற்று ஓவராகவே விமர்சனம் செய்திருந்தார். இதற்கு ஓபிஎஸ் இடம் நன்றாக வாங்கியும் கட்டிக்கொண்டார்.

அதுபோலவே, விடுதலை சிறுத்தைகள், மதிமுக கட்சிகளும் மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர் பதவி கேட்க உள்ளன.. மேயர் பதவி குறித்து விரைவில் முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று ஏற்கனவே கூறியிருந்த திருமாவளவன், தங்களுக்கு எத்தனை பதவிகள் வேண்டும் என்ற பட்டியலையே ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார்..ஆனால், கூட்டணி கட்சிகளின் எதிர்பார்ப்புகளுக்கு கிரீன் சிக்னல் எதையும் தராத ஸ்டாலின், திமுக மாவட்ட செயலாளர்களிடம் பேசி வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூட்டணி கட்சி தலைவர்களிடம் கூலாக சொல்லிவிட்டார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் யாருமே கூட்டணி கட்சித் தலைவர்களை மதிப்பதில்லை என்பது வேறு கதை.

எனவே, மாவட்ட செயலாளர்களும், மேயர் பதவியையும் நகர்மன்றத் தலைவர் பதவியையும் கொடுக்க விரும்பாமல், துணைமேயர் அல்லது துணை நகர்மன்ற தலைவர் பதவியை ஒரு சில கட்சிகளுக்கு கொடுக்கலாம் என்ற முடிவில் உள்ளது... ஆனாலும் கூட்டணி சம்பந்தமாக ஒரு முடிவும் எட்டப்படவில்லை.. மற்றொரு பக்கம் திமுகவுக்குள்ளேயே முட்டல் மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுவும் சென்னையை குறி வைத்து நடந்து கொண்டிருக்கின்றன.


இந்த முறை சென்னை மாநகராட்சி மேயர் பதவி, பட்டியலின சமுதாய பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது... துணை மேயர் பதவியானது, பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு 13 பட்டியலின பெண்கள் வெற்றி பெற்றிருந்தாலும், அதில் ஒருவர் மட்டுமே மேயராக போகிறார்.. அதேபோல, துணை மேயர் பதவிக்கு கவுன்சிலர்களிடையே குடுமிப்பிடி சண்டை எழுந்துள்ளது.. அதிலும், முதலியார், வன்னியர், நாடார், முக்குலத்தோர், யாதவர் சமுதாயங்களை சேர்ந்த கவுன்சிலர்கள்தான் துணை மேயர் பதவியை பிடிக்க கடுமையான முயற்சியை எடுத்து வருகின்றனர்.

இதற்கு காரணம், கடந்த முறை சட்டசபை தேர்தலில், யாருக்கெல்லாம் சீட் கிடைக்கவில்லையோ, அவர்களுக்கு மாநகராட்சியில் பதவிகள் தரப்படும் என்று கட்சி மேலிடம் வாக்குறுதி தந்திருந்ததாம்.. அந்த ரூட்டைதான் இப்போது அனைவரும் கையில் எடுத்துள்ளனர்.. எனவே தங்களுக்கு தெரிந்த விஐபிக்கள், நிர்வாகிகள், மாசெ.க்கள் மூலம் துணை மேயர் பதவியை பிடிக்க கவுன்சிலர்கள் படாத பாடு பட்டு வருகிறார்கள்.

இதனால் யாருக்கு எப்படி பதவிகளை ஒதுக்குவது என்று தெரியாமல் மேலிடம் குழம்பி போயுள்ளதாம்.. சமுதாய ரீதியாக திருப்திப்படுத்தினால்கூட, அத்தனை சமுதாயத்துக்கும் பதவிகளை தர முடியாத சூழல் உள்ளது.. அல்லது கோட்டம் வாரியாக ஒன்றுக்கு மேற்பட்ட துணை மேயரை அதாவது, அதாவது தென், மத்திய மற்றும் வட சென்னை என மொத்தம் மூன்று மேயர் பதவிகளை உருவாக்கலாமா என்றும் திமுக மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம். எப்படி பார்த்தாலும் இன்னும் 4 நாளுக்குள் முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.. பார்ப்போம்..!