3, 477 கோடியில் சென்னை பெங்களூருக்கு அதிவிரைவு சாலை

3, 477 கோடியில் சென்னை பெங்களூருக்கு அதிவிரைவு சாலை

சென்னை - பெங்களூரு இடையே, 3,477 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள அதிவிரைவு சாலைக்கு, மண் பரிசோதனைகாஞ்சிபுரத்தில் மண் பரிசோதனை துவங்கியுள்ளது.தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருந்து, அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரு வரை, தங்க நாற்கர சாலை உள்ளது.

இந்த சாலை வழியாக, சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல, ஏழு மணி நேரம் ஆகும். பயண நேரத்தை குறைக்கும் விதமாக, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து சுங்குவார்சத்திரம், கோவிந்தவாடி, பாணாவரம், ராணிப்பேட்டை வழியாக பெங்களூருக்கு செல்வதற்கு, அதிவிரைவு சாலை அமைக்கப்பட உள்ளது.சாலை அமைக்கப்பட்டால், சென்னையில் இருந்து நான்கு மணி நேரத்தில், பெங்களூரு சென்றடையலாம். இந்த சாலை அமைப்பதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் சிவன்கூடல், மொளச்சூர், சிறுவாக்கம், கோவிந்தவாடி, நெமிலி, பாணாவரம் ஆகிய கிராம மக்களிடம், 2012ல் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கருத்து கேட்டனர். அடுத்த கட்டமாக, நிலம் கையகப்படுத்தும் பணிக்காக, 2016ல் அளவீடு செய்தனர்.

அதன்படி, 90 மீட்டர் அகலம், 264 கி.மீ., நீளம் என அளவிட்டனர். இதற்காக, 5,917 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 30 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.அதிவிரைவு சாலைக்காக, 7,406 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. 3,477 கோடி ரூபாய் கட்டுமான பணிக்கும்; 3,929 கோடி ரூபாய் நில எடுப்பிற்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இது, நான்கு வழிச்சாலையாக அமைகிறது.

கட்டுமான பணிகளை துவக்குவதற்கு, ஆங்காங்கே மண் மாதிரிகளை சேகரிக்கும் பணியை, நெடுஞ்சாலைத் துறையினர் தற்போது செய்து வருகின்றனர்.சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலையில், காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் ஆகிய பிரதான நகரங்களுக்கு வாகன போக்குவரத்து வசதிக்கு, கோவிந்தவாடி கிராமத்தில் பஸ் நிலையம் அமைகிறது. அதே பகுதியில் சுங்கச்சாவடியும் அமைய இருக்கிறது. கோவிந்தவாடி ஏரிக்கரை ஓரம், ராணிப்பேட்டை மாவட்ட மகேந்திரவாடி உள்ளிட்ட இடங்களில், மேம்பாலங்கள் அமையவுள்ளன.தேசிய நெடுஞ்சாலைத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை அமைக்கும் பணிக்கு, பிரதான கடவுப்பாதைகள், ஏரி, குளம், ஆறுகள் ஆகிய பகுதிகளில், மேம்பாலங்கள் அமைய உள்ளன.இதுபோன்ற இடங்களில், மண் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. மண் கூராய்வு முடிவுக்கு பின், சாலை அமைக்கும் கட்டுமான பணிகள் துவக்கப்படும். இந்த பணிகள், 2024க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.