பைகள் இன்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு!

 பைகள் இன்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்த நாளிலிருந்து தினந்தோறும் ஒரு புகார் வந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் 21 வகை பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 4ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இதுவரை 45.1 % அட்டைதாரர்களுக்குத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் எல்லோருக்கும் 20 பொருட்கள் கிடைக்கவில்லை என்றும், பெரும்பாலான பைகளில் 5 முதல் 6 பொருட்கள் குறைவாக இருப்பதாகவும், இருக்கின்ற பொருட்களின் பொட்டலங்கள் திறந்து இருப்பதாகவும், பொருட்கள் தரமற்றதாக இருப்பதாகவும் மக்கள் புகார் தெரிவித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

தற்போது பொங்கல் பை இல்லாததால் பல இடங்களில் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது.

இந்தப் புகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு இன்று(ஜனவரி 8) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கொரோனா தொற்றை சமாளிப்பதற்காக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் காரணமாக பைகள் தைக்கும் பணியில் சில இடங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் விரைந்து வழங்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பைகள் முழுமையாக கிடைக்கப் பெறாத பகுதிகளில், இந்தப் பைகள் இல்லாமல் 20 பொருட்களை பெற்றுக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு தொகுப்பினை வழங்கிடவும், அவர்களுக்கு பைகளை பின்னர் வழங்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பைகள் இல்லாமல் பொருட்களை வாங்க விரும்பும் பயனாளிகள் தங்கள் பைகளை கொண்டு வந்து தொகுப்பினை பெற்றுச் செல்லலாம். பைகள் இன்றி பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் பின்னர் பொது விநியோக திட்ட பொருட்களை வாங்க வரும்போது பைகளை பெற்றுக்கொள்ளலாம். இதற்காக பைகள் இல்லாமல் பரிசு தொகுப்பை வாங்கும் பயனாளிகளுக்கு தனியாக டோக்கன்கள் வழங்கப்படும். இந்த நெறிமுறைகளை கடைப்பிடித்து பயனாளிகள் பொங்கல் பரிசு தொகுப்பு விரைந்து வழங்குமாறு பொதுவிநியோகத் திட்ட அலுவலர்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விநியோகத்தின்போது, இதுதொடர்பாக ஏதேனும் தவறு அல்லது முறைகேடு நடந்தால் 180059935430 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். புகார்களை ஆய்வு செய்து, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.