நள்ளிரவில் அழிந்து போன வணிக நகரம்

நள்ளிரவில் அழிந்து போன வணிக நகரம்


.டிசம்பர் 22,1964வங்கக்கடலில் ஏற்பட்ட புயலால், 49 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்,(டிச.,22) நள்ளிரவில் அழிந்து போன வணிக நகரம் தனுஷ்கோடி, தற்போது புயலின் எச்சங்களாக காட்சியளிக்கிறது.  

இலங்கையில் ராவணனை கொன்று, சீதையை மீட்டு வந்தபோது, ராமர் எய்த அம்பு விழுந்த இடம் தான் தனுஷ்கோடி (வில், அம்பு) என, ராமாயணத்தில் குறிப்பிட்டு உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் உள்ள இந்நகரம், 100 ஆண்டுக்கு முன்பு வணிக நகரமாக விளங்கியது. ராமேஸ்வரத்தை விட தனுஷ்கோடி நகரம் தான் பிரசித்தி பெற்று இருந்தது. 1914 ல், தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தும், சென்னை முதல் தனுஷ்கோடிக்கு "போட் மெயில்' என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தும் நடைபெற்றன. இந்நகரை, கடல் அலைகள், காணாமல் செய்த சம்பவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இதே நாளில், அதாவது, 1964 டிச., 22 ல், இரவு 12.30 மணிக்கு, கடலில் ஏற்பட்ட புயலால், ராட்சத அலைகள் எழுந்து, தனுஷ்கோடியை தாக்கின. தூக்கத்தில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், புயலின் கோரத்தாண்டவத்திற்கு இரையாகினர். 

தனுஷ்கோடியில் இருந்த ரயில்வே ஸ்டேஷன், சர்ச், பள்ளி, மருத்துவமனை, தபால் நிலையம், பயணிகள் தங்கும் விடுதி, கோயில் உள்ளிட்ட பல கட்டடங்கள் சிதைந்தன. இதை தேசிய பேரிழப்பாக அறிவித்த மத்திய அரசு, தனுஷ்கோடியை மனிதர்கள் வாழ முடியாத பகுதி எனவும், அறிவித்தது.