தமிழ்நாட்டுக்குள் நுழைந்த ஒமிக்ரான்!

 தமிழ்நாட்டுக்குள் நுழைந்த ஒமிக்ரான்!

நைஜீரியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் எனும் மாறுபாடு அடைந்த வைரஸ் இந்தியாவில் முதலில் கர்நாடகாவில் கண்டறியப்பட்டது. இதையடுத்து 10 மாநிலங்களில் 68 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகமானோர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று காணப்பட்டாலும் தமிழ்நாட்டில் நேற்று மாலை வரை யாருக்கும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில் நைஜீரியாவில் இருந்து தமிழ்நாடு வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேற்றிரவு (டிசம்பர் 15) தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மற்ற வகை வைரஸ்களைக் காட்டிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தடுப்பு வழிமுறைகள் மற்றும் தடுப்பூசி ஆகியவைதான் ஒமிக்ரானை தடுப்பதற்கான ஆயுதம். இந்தியாவின் பல மாநிலங்களில் புதியவகை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டன. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அதற்குமுன்பே நாம் முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இந்த நிலையில் நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக தமிழ்நாடு வந்தவருக்கு எஸ் ஜீன் வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கும் பரிசோதனை நடத்தியதால் எஸ் ஜீன் கண்டறியப்பட்டுள்ளது. அதுபோன்று நைஜீரியாவில் இருந்து வந்தவருடன் பயணித்த வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் எஸ் ஜீன் உறுதியான நிலையில் மொத்தம் ஏழு பேரின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர் உட்பட எட்டு பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அனைவரும் நலமாகவே உள்ளனர். சிறிய அளவிலான பாதிப்பு மட்டுமே உள்ளது.

ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தீவிரமாகக் கண்காணித்து வந்ததால்தான், தற்போது ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் டெல்டா வகை மட்டுமே உறுதி செய்யப்பட்டது. தற்போதுதான் நைஜீரியாவிலிருந்து வந்தவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வந்துவிட்டதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. மாறாக அனைவரும் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும்” என்று கூறினார்.