மூட்டைப் பூச்சிக்கு பயந்து .... ஆசிரியர்களை கொளுத்தும் தமிழக அரசு....!?

 மூட்டைப் பூச்சிக்கு பயந்து .... ஆசிரியர்களை கொளுத்தும் தமிழக அரசு....!?


       _*பாடபுத்தகங்களின்  முதல் பக்கத்தில்.. "தவறு இழைக்கும் ஆசிரியர்கள் பற்றி புகார் அளிக்க.." டெலிபோன் நம்பர் வெளியிடப்படும்.*- என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுளளது .

       இது உணர்ச்சி வசப்பட்டு எடுக்கப்படும் மிகத் தவறான முடிவு.  

      ஆசிரியர்கள் என்பவர்கள்  மரியாதைக்குரியவர்கள். "ஒரு தொலைபேசி எண்ணில் அவர்களது எதிர்காலத்தையே பணயம் வைக்க கூடாது."

      மாணவர்களில் எத்தனை பேர் ஒழுக்கமானவர்கள்?. குணங்கெட்ட மாணவர்கள், மாணவிகள், படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தால், ஆசிரியர்களால் அவர்களை எப்படி ஒழுங்கான பாதைக்குத் திருப்ப முடியும் ? 

      வகுப்பில் பேசாதே, பாடத்தை கவனி என்றால், ''ஐயா முதல் பக்கம்", என்று மிரட்ட மாட்டார்களா?    தாஜ்மகாலை யார் கட்டியது  என்று கேட்டால், "ஐயா முதல் பக்கம்",  என்று சொல்ல மாட்டார்களா? 

     வகுப்பைக் கட் செய்துவிட்டு.. ஏண்டா நேற்று சினிமாவுக்கு போனே? என்று கேட்டால், ''ஐயா முதல் பக்கம்'' - என்று முதல் பக்க டெலிபோன் நம்பரை காட்ட மாட்டார்களா?  *முன்னூறு பக்கங்கள் பாடங்களை.. விளக்க வேண்டிய ஒரு ஆசானை, முதல் பக்கத்திலேயே விலங்கிடுவது எவ்வகையில் நியாயம்?*

     பள்ளிகளில் மட்டும்தான் ஒழுங்கீனம் உள்ளதா?  பஸ்களில் எவ்வளவு  சித்ரவதைகளை அனுபவிக்கிறார்கள், பெண்கள்? பஸ் டிக்கெட்களில் புகார் எண் வெளியிடுவார்களா?? 

      அழகு நிலையங்களில், உடற்பயிற்சி மையங்களில்,  ஏன் நேற்று மராட்டியத்தில் புஷ்பக எஸ்பிரஸில் கூட  பாலியல் வன்புணர்வு நடந்துள்ளது. பள்ளியில் வேண்டுமானால் பாடப்புத்தகங்களில் வெளியிடலாம். பள்ளியிலிருந்து வீட்டுக்கு போகும் இடைப்பட்ட நேரத்தில்? 

         சென்னையில் ஒரு Gated Community யில் பேசும் திறன் இல்லாத ஒரு பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை யாரால் மறந்திருக்க முடியும்?

         திரைப்படங்களில், வண்டி மெக்கானிக் - ஸ்கூல் மாணவி காதல் .. போன்ற கதையெல்லாம்  எடுக்கிறார்கள். மாணவர்களின் மனதை கெடுக்கும் ஆபாச யூடியூப் காட்சிகள் உள்ளன. மாணவர்கள் வீட்டில் பாடம் படிக்காமல் பிக் பாஸ் பார்க்கிறார்களே?  நேற்று ஒரு பத்து வயது மாணவனின் தாயின் கள்ளக்காதலன் மாணவனை எரித்து  கொன்றதாக செய்தி வந்ததே.  

 ‌      இவற்றையெல்லாம் எப்படித் தடுப்பது ?  பெற்றோர்களின் ஒழுங்கீனத்தால்  கூட மாணவர்கள் சிரமப்படுகிறார்களே? 

          அவ்வளவு ஏன்? தந்தை டாஸ்மாக் போய்விட்டு வந்து கலாட்டா  செய்வதால், ''என் குழந்தைகளை உங்கள் வீட்டுக்கு படிக்க அனுப்பலாமா?'' என்று எங்கள் வீட்டுப்  பணிப்பெண் கேட்க, நான்  அவர்களுக்குப்  பாடமே சொல்லிக் கொடுத்திருக்கிறேன். 

     *டாஸ்மாக்கால் கூட மாணவர்கள் தவிக்கிறார்கள்!* இதையெல்லாம்  கண்டிக்காமல், ஆசானின் குடுமியை  மாணவர்களின் கையில் சிக்க வைத்தால், கல்வி எப்படி உருப்படும்? 

        முதல் பக்கத்தில் ஆசிரியரைப் பற்றி புகார் அளிக்கத் தொலைபேசி எண்ணைப் பாடப்புத்தகத்தில் வெளியிட்டுவிட்டு, அடுத்த பக்கத்தில், மாதா பிதா குரு தெய்வம்  என்றெல்லாம்  நமது சங்கப் புலவர்களின் செய்யுள்களை   வெளியிட்டால், நமது கல்வியைக் கண்டு 

தமிழ் நிலமென்னும் நல்லாள்   நகுவாள். 

      ஆசிரியர் தேர்வில் கண்டிப்பைக் காட்டுங்கள். ரோமியோக்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள்.  அவர்களை இனம் காண்பது ஒன்றும் பெரிய வித்தை அல்ல.  அதை விட்டு,  தெய்வத்திற்கு முன்பாக வரிசையில் வைக்கப்பட்டுள்ள ஆசான்களை , செப்டம்பர் 5  ஆசான்கள் தினம் என்று கொண்டாடிப் போற்றும் குருவை,  மனதில் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும்  ஆசான்களை, போலீஸ் நிலையத்தில்   பட்டியலிடபட்டிருக்கும், மோசடிப் பேர்வழிகளின்  வரிசையில் நிற்க வைக்காதீர்கள். 

     பள்ளியில் ஒழுங்கை  கண்டிப்பான கண்காணிப்பால்தான்  மேற்பார்வை செய்ய இயலும். 

      _*ஆசிரியர் என்பார் வழி நடத்துவதற்கே, !*_

_*வழி தவறி செல்பவர்களின் அடியாள் இல்லை !*_

ஆசிரியர்கள் மிரட்டப்பட்டால்,  நிரந்தர முதல்வர் போல, 

நிரந்தர ALL PASS தான்.

மொத்தத்தில்.. *மூட்டைப்பூச்சிக்குப் பயந்து நன்றாகவே வீட்டைக் கொளுத்துகிறார்கள்.*

இப்படி எல்லாம் ஆசிரியர்களை அவமானப்படுத்துவதை விட,  எல்லா பள்ளிகளையும் இழுத்து மூடிவிட்டு, எல்லோரும் சினிமா, கிரிக்கெட் பாருங்கள்.  எல்லாவற்றையும் இலவசமாக  தருகிறோம்.  வேலையும் கொடுத்துவிடுகிறோம். திருமணமும் செய்து வைத்து, தங்க பதக்கம் கொடுக்கிறோம். எதிர்காலத்தை பற்றி கவலைப் படாதீர்கள்.  பள்ளிகளில் பாலுணர்வு தொல்லைகள் இருப்பதால், நீங்கள் படிக்கவே வேண்டாம்.  '' -- என்று அறிவித்து விடலாம்.

நல்ல..இருக்கு சார்.

ஆள விடுங்க சார்.................

 இந்த அரசை ஆட்சிக்கு கொண்டு வர ஆசிரியர்கள் பட்டபாடு மனதளவில் - களப்பணியில் - பரப்புரையில் என சொல்லி மாளாது...

ஆட்சிக்கு வந்தால் புதியதாக செய்ய வேண்டுமானால் 52 ஆண்டுகளாக கண்டுகொள்ளாமலிருந்த பாலாறு - கொசஸ்தலை - தென்பெண்ணை - கெடிலம் - கொள்ளிடம் - வைகை என இருந்த ஆறுகளில் இன்று ஆயிரக்கணக்கான டி.எம்.சி., நீர் தடுப்பணைகள் கட்டப்படாமல் கடலிலே கடக்கிறது...

ஒவ்வொரு நகரங்களும் மழை நேரத்தில் நீரில் தத்தளிக்கின்றன..

இன்னும் நிறைய உள்ளது. 

இவைகளைக் கவனித்து நாட்டை வளப்படுத்தாமல் 100 க்கு 99 விழுக்காடு என் கடமை பணி செய்து கிடப்பதே என அடிமையிலும் அடிமையாய் வாழும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி ஆசிரியர்களைக் கேவலப்படுத்தும் - புண்படுத்தும் செயலாக இது அமையும் என்பதோடு...

கூடுதலான எண்ணிக்கையில் பள்ளிகளில் ஒழுக்கச் சீர்கேட்டையும் - தன்னொழுக்கமற்ற மாணவ மாணவிகளையும் - இளம் குற்றவாளிகளையும் கூடிய விரைவில் எதிர்காலத்தில் உருவாக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை...

வாழ்க புதிய சிந்தனையாளர்கள்...