இனிஷியலையும் தமிழில்தான் எழுத வேண்டும்!!
பள்ளி, கல்லூரிகளில் தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இன்றைய தலைமுறையினர்களில் பெரும்பாலோனாருக்கு தமிழ்மொழியை முறையாக பேசவும் முடியவில்லை, பிழையின்றி எழுதவும் தெரியவில்லை. ஆங்கிலம் கலந்த கலவை தமிழையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றன. தூய தமிழில் பேசுபவரை பார்ப்பது அரிதாக உள்ளது. இன்னும் சிலர் கையெழுத்து போடும்போது பெயரின் முன் எழுத்தை, அதாவது இனிஷியலை ஆங்கிலத்திலும், பெயரை தமிழிலும் எழுதுகின்றனர். கோ,பொ போன்ற நெடில் எழுத்துக்கள் முன் எழுத்துக்களாக வரும்போது பெரும்பாலோனர் அதை ஆங்கிலத்தில் எழுதிவிட்டு பெயரை தமிழில் எழுதுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர், தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை பள்ளி,கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் பொது பயன்பாடுகளில் இம்முறையை பின்பற்ற வேண்டும் என்று அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,”முதல்வர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தமிழிலேயே கையொப்பம் இடவும், அதில் முன்னெழுத்துகளையும் தமிழிலேயே எழுதப்பட வேண்டுமாறு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
தொட்டில் பழக்கம் எனத் தொடங்கும் பழமொழிக்கேற்ப மாணவர்களின் தொடக்க கல்வி முதல் கல்லூரி காலம் வரையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு தமிழை முதன் முதலில் மாணவர்களது பெயரில் சேர்ப்பது சிறப்பானதாக அமையும். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பெயர் எழுதும் போது அதன் முன்னெழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையினை அன்றாட வாழ்வில் கொண்டு வர மாணவர்கள் பள்ளிக்கு சேர அளிக்கும் விண்ணப்பம் வருகை பதிவேடும் பள்ளி, கல்லூரி முடித்து பெறும் சான்றிதழ் வரையில் அனைத்திலும், தமிழ் முன்னெழுத்துடனே வழங்கும் நடைமுறையினை கொண்டு வரவும் மேலும் மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட அறிவுறுத்தப்படுகிறது.
தலைமைச் செயலகம் முதல் கடைநிலை அரசு அலுவலகம் வரை அனைத்து அரசுத் துறைகளிலும் வெளியிடப்படும் ஆணைகள் மற்றும் ஆவணங்கள் பொது மக்களின் பெயர்கள் குறிப்பிடும்போது முன்னெழுத்துகள் உட்பட பெயர் முழுமையையும் தமிழிலே பதிவு செய்யப்பட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அரசு துறைகளில் பெறப்படும் விண்ணப்பங்களிலும் தமிழ் முன்னெழுத்துடன் கையொப்பத்தினையும் தமிழிலேயே இடுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதுகுறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொது மக்கள் பார்வையில்படும் வகையில் விளம்பர பலகைகளை வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.