சிறுவர்களுக்குத் தடுப்பூசி: முன்பதிவு கட்டாயம்!

 சிறுவர்களுக்குத் தடுப்பூசி: முன்பதிவு கட்டாயம்!

இந்தியாவில் சிறுவர்களுக்கான தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

கடந்த 25ஆம் தேதி தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 3ஆம் தேதி முதல் 15-18 வயது வரையிலான சிறுவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும். ஜனவரி 10ஆம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளி தொடர்பாக தேசிய நோய்த்தடுப்பு தொழில்நுட்பக் குழு ஆலோசனை நடத்தியது. அதில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணை செலுத்தப்பட்டு 9 மாதங்கள் ஆன பிறகுதான் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும். அதனால்தான், ஜனவரி 16, 2021 முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்களுக்குத் பூஸ்டர் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு அடுத்தப்படியாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்களப் பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்குத் தகுந்த இடைவெளி தகுதியுடன் பிப்ரவரியில் பூஸ்டர் டோஸ் செலுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிறுவர்களுக்கான தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், “பூஸ்டர் டோஸ் செலுத்துபவர்களுக்கு, கோவின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்ட தேதியின் அடிப்படையில் செலுத்தப்படும்.

தடுப்பூசியின் இரண்டாவது தவணை செலுத்தப்பட்டு 39 வாரங்கள் அல்லது 9 மாதங்கள் ஆனவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும்.

முன்பு செலுத்தப்பட்ட தடுப்பூசியே பூஸ்டர் டோஸாகச் செலுத்தப்படும். இந்த டோஸ் செலுத்தப்பட்டவுடன் கோவின் சான்றிதழில் மாற்றம் செய்யப்படும். ஆன்லைன் மற்றும் தடுப்பூசி மையங்களில் நேரடியாகச் சென்று பதிவு செய்து பூஸ்டர் போட்டுக் கொள்ளலாம்.

2007ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும். 15-18 வரையிலான சிறுவர்கள் கோவின் இணையதளத்தில் ஜனவரி 1 முதல் முன்பதிவு செய்ய வேண்டும். சிறுவர்களுக்கு கோவாக்சின் மட்டுமே செலுத்தப்படும். இவர்களும் ஆன்லைன் மற்றும் தடுப்பூசி மையங்களில் நேரடியாகச் சென்று பதிவு செய்து தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.