திருச்சி மாநகர மேயர் ஆகிறாரா அருண் நேரு.....?! திருச்சி அரசியலின் அடுத்த நகர்வு....!!

திருச்சி மாநகர மேயர் ஆகிறாரா அருண் நேரு.....?! திருச்சி அரசியலின் அடுத்த நகர்வு....!!


திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, தனது மகன் அருணை அரசியலில் களமிறக்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது.

கட்சிக்காரர்கள் இல்ல திருமண விழா மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு தனது பிரதிநிதியாக மகனை அனுப்பி வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தொழில் செய்து வரும் அருண் நேரு அண்மைக்காலமாக திருச்சியில் அதிகம் தங்கி கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்.

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய கே.என்.நேரு கடந்த 2020-ம் ஆண்டு திமுக முதன்மைச் செயலாளராக புரோமோஷன் அளிக்கப்பட்டு சென்னைக்கு அழைக்கப்பட்டார். மாவட்டச் செயலாளர் பதவியை விட்டுக்கொடுக்க மனமின்றி இருந்த நேருவிடம் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவருக்கு நெருங்கிய சகாக்கள் எடுத்துக்கூறி ஒரு வழியாக முதன்மைச் செயலாளர் பதவியை ஏற்க வைத்தனர்.

இதையடுத்து திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய என மூன்றாக பிரிக்கப்பட்டு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். முதன்மைச் செயலாளராக இருந்த போது கூட திருச்சியில் நடக்கும் நிகழ்வுகளில் தவறாமல் கலந்துகொண்டு லோக்கலில் தனக்கான செல்வாக்கை தொடர்ந்து தக்க வைத்து வந்தார் கே.என்.நேரு. இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சராக இருப்பதால் பெரும்பாலும் அவர் சென்னையில் இருக்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சீனியர் அமைச்சர் என்கிற முறையில் முதலமைச்சருடன் இருக்க வேண்டியதும் உள்ளது.

இதனால் திருச்சி மாவட்டத்தில் கட்சிக்காரர்கள் கொடுக்கும் அழைப்பிதழை ஏற்று அவர்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு கே.என்.நேருவால் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஆதரவாளர்கள் இல்ல துக்க நிகழ்வுகளிலும் நேருவால் தலைகாட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியை கலக்கி வரும் நிலையில் அவருக்கான ஆதரவாளர்கள் வட்டம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது.

இதனால் இப்படியே விட்டால் லோக்கலில் செல்வாக்கு குறையக்கூடும் என எண்ணிய கே.என்.நேரு, தனக்கு பதில் தனது பிரதிநிதியாக மகன் அருணை அனைத்து விஷேசங்களுக்கும் அனுப்பி வைக்கத் தொடங்கியிருக்கிறார். இதனிடையே அருணை மாநகராட்சி மேயர் வேட்பாளராக களமிறக்குமாறு நேருவிடம் அவரது ஆதரவாளர்கள் அண்மையில் கோரஸாக கோரிக்கை வைத்திருக்கின்றனர். ஆனால் நேருவின் மகன் அருணின் திட்டமே 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது தானாம்.

இதனிடையே அருண் நேருவை உள்ளாட்சித் தேர்தலில் களமிறக்க ஒரு குரூப் முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்போது திருச்சியெங்கும் கே.என்.நேருவுக்கு சமமாக அவரது மகனுக்கும் போஸ்டர்கள், ப்ளக்ஸ்கள் வைத்து வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதுமட்டுமல்லாமல் திருச்சியில் புதிய கடை திறப்பு விழாக்களில் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி வருகிறார் நேரு மகன் அருண் நேரு.