திமுக மாசெக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன? நகர்ப்புற உள்ளாட்சியில் மறைமுகத் தேர்தல்...?!

 திமுக மாசெக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன? நகர்ப்புற உள்ளாட்சியில் மறைமுகத் தேர்தல்...?!

இன்னும் 15 நாட்களில் சட்டமன்றம் கூடுகிறது, அடுத்த 20 நாட்களில் உள்ளாட்சி நகரப்புறத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்.... திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று (டிசம்பர் 18) அறிவாலயத்தில் மாலை 5.30 மணியளவில் கூட்டினார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

இக்கூட்டத்தின் முதல் அம்சமாக, தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள் என்ற தலைப்பில் உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தின் உரை, எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது ஆற்றிய உரைகளின் தொகுப்பை மூன்று பாகங்களாக வெளியிட்டார்கள். நூல் அறிமுகம் விளக்க உரையாற்றினார் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்பியுமான ஆ.ராசா. அப்போது அவர், “ கருணாநிதியை விட டேஞ்சரான ஆள் இந்த ஸ்டாலின் என்று வட இந்தியாவில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதைவிட ஒர் நல்ல பெயரை நீங்கள் வாங்கவே முடியாது”என்று குறிப்பிட்டார்.

அதன் பிறகு மூன்று பாகம் அடங்கிய புத்தகம் ரூபாய் ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது, மாசெக்கள் கூட்டம் முடிந்தபிறகு புத்தகங்களை வாங்கச் சொல்லிவிட்டார்கள்.கூட்டம் முடிந்ததும் பல மாசெக்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அனைவரும் ஆயிரம் ஐந்தாயிரம் பத்தாயிரம் எனப் பணம் கொடுத்து மேடையேறி புத்தகம் வாங்கினார்கள்.

கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசியபோது, “பல வருடங்களாக நான் தளபதியின் பக்கத்தில் இருக்கிறேன். ஆனால் கடந்த ஆறு மாத காலமாகத்தான் முதல்வர் என்ற முறையில் அவரது அருகில் நான் அமைச்சராக இருந்து பார்த்து வருகிறேன். தமிழக மக்களை அப்படிப் பார்த்துக் கொள்கிறார். இதோ இந்த கூட்டத்தின் மூலம் கட்சியையும் அப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அவரது முனைப்பு தெரிகிறது”என்று குறிப்பிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “ஆட்சிக்கு நல்ல பெயர் இருக்கிறது. மக்கள் நன்றாக பேசுகிறார்கள் என்று கருதி நாம் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. மாநிலம் முழுதும் திமுகவின் உறுப்பினர் சேர்க்கையை நாம் தீவிரப்படுத்த வேண்டும். மார்ச் 1 ஆம் தேதிக்குள் திமுகவின் ஒவ்வொரு நிர்வாகியும் தனக்கு உட்பட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 30% பேரை திமுகவில் உறுப்பினர் ஆக்குவதற்கான இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும். பெண்கள், இளைஞர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு திமுக உறுப்பினர்களாக இருக்கவேண்டும், ஆளுங்கட்சி என்பதால் அனைவரும் ஆர்வமாகக் கட்சியில் சேர்ந்து வருகிறார்கள். அதனால் ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும் ஆயிரம் உறுப்பினர் படிவம் வழங்குகிறேன், ஒரு படிவத்தில் 25 பேர் சேர்க்கலாம், ஆயிரம் படிவங்களில் உறுப்பினர்களைச் சேர்த்து அந்த படிவங்களைத் தலைமைக்கு ஒப்படையுங்கள். அதாவது தொகுதிக்கு 25ஆயிரம் பேர் சேர்க்கவேண்டும், 234 தொகுதிக்கும் 58 லட்சத்து 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்” என்றவர் அடுத்து உள்ளாட்சித் தேர்தல் பற்றியும் பேசினார்.

“வரக்கூடிய உள்ளாட்சி நகர்ப்புறத் தேர்தலில் 100% சதவீதம் வெற்றிபெற்றாக வேண்டும் அதற்காக நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். ஊரக உள்ளாட்சித் தேர்தலைப் போலவே கூட்டணிக் கட்சியினருக்கு உரிய இடங்களை மாவட்ட அளவில் மாவட்டச் செயலாளர்களான நீங்களே பேசி முடித்துக் கொள்ள வேண்டும்.

கவுன்சிலர்கள் வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு வார்டிலும் இருவர் அடங்கிய பட்டியலையும், சேர்மன் (மேயர்) தேர்தலுக்கு மூவர் அடங்கிய பட்டியலையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்” என்று ஸ்டாலின் கூறியதன் மூலம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் மறைமுகத் தேர்தல்தான் என்று தெரியவருகிறது.

” ஆட்சியைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள், தவறுகள் இருந்தால், குறைகள், குற்றங்கள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன், யாராவது கருத்துச் சொல்ல விரும்பினால் சொல்லுங்கள். ஆட்சி நன்றாக இருக்கிறதே என்று மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. பூத் கமிட்டி போட வேண்டும், ஒவ்வொரு பகுதியிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்த வேண்டும்” என்று பேசினார் ஸ்டாலின். .

பூத் கமிட்டிகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து சட்ட ஆலோசகரும் மாநிலங்களவை எம்பியுமான என்.ஆர். இளங்கோ உரையாற்றினார்.

அதன் பின்... வேறு யாரும் மாவட்டச் செயலாளர்கள் பேசுகிறீர்களா என்று கேட்டனர். அப்போது தேனி மாவட்டச் செயலாளரான தங்க தமிழ் செல்வன் எழுந்து, “ஆட்சியைப் பற்றி மக்கள் பாராட்டுகிறார்கள், உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. ஆனால் வார்டுகள் பிரிக்கப்பட்டதில் ஏகப்பட்ட குழப்பஙள் குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளது. அதையெல்லாம் முதலில் சரிசெய்யவேண்டும்” என்றார்.

உடனே முதல்வர் இதுகுறித்து நேருவிடம் பதில் கூறுமாறு அறிவுறுத்தினார். பின் நேரு எழுந்து, “அதையெல்லாம் சீர்செய்ய நான்கு மாதங்கள் கடந்துவிடும், நீதிமன்றம் நான்கு மாதம்தான் கெடு கொடுத்துள்ளது அதனால் விரைவில் தேர்தலை நடத்தவேண்டும்” என்றார்.

எம்..எல்..ஏ. சீர்காழி பன்னீர் எழுந்து, ‘நமது ஆட்சியை மக்கள் எல்லாம் பாராட்டுகிறார்கள். பொங்கலுக்கு 500 ரூபாய்க்குப் பொருட்கள் கொடுக்கிறோம். அத்துடன் 500 ரூபாய் பணம் சேர்த்துக் கொடுத்தால் நல்லா இருக்கும்” என்றார்.

கட்சி ரீதியான குறைகள் பல இருந்தும் மாசெக்கள் யாரும் எழுந்து பேசவில்லை.