நிலச்சரிவு: திருப்பதி பயணத்தை தள்ளி வையுங்கள்!

 நிலச்சரிவு: திருப்பதி பயணத்தை தள்ளி வையுங்கள்!


திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ள பக்தர்கள் பயணத்தை தள்ளி வைக்க தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தொற்று குறைந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்க சில விதிகளை தளர்த்தி கோயில் தேவஸ்தானம் அனுமதி அளித்திருந்தது. இதனையடுத்து முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

திருமலை திருப்பதியில் நவம்பர் 30ஆம் தேதி இரவு நல்ல மழை பெய்தது. அதன் விளைவு நேற்று காலை (டிசம்பர் 1) திருமலைக்குச் செல்லும் மலைப்பாதையில் மேலே செல்லும் வழியில் ஒரு ராட்சசப் பாறை உருண்டு மக்கள் பயணிக்கும் சாலையில் விழுந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக யாரும் அதில் சிக்கவில்லை. அதைத் தொடர்ந்து நிலச் சரிவும் ஏற்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செய்திக்குறிப்பு, இதுவரை ஐந்து அல்லது ஆறு இடங்களில் இதுபோன்ற நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

இதனால் திருமலைக்குச் செல்லும் பாதை பயணம் செய்ய இயலாத அளவுக்கு சில இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இந்தப் பாதையை சீர் செய்த திருப்பதி திருமலை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஊழியர்கள், துறை சார்ந்த வல்லுநர்களோடு சேர்ந்து பணி ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ள பக்தர்கள் தங்கள் பயணத்தை 15 நாட்கள் வரை தள்ளி வைக்க வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் அனைத்தையும் ஒழுங்கு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி ஐஐடியில் இருந்து ஒரு நிபுணர்கள் குழு திருப்பதி வருகிறது. இந்தக் குழு எதிர்காலத்தில் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்னும் அறிவுறுத்தலை வழங்கும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சேர்மன் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

10 முதல் 15 நாட்களுக்குப் பின்னர் பக்தர்கள் திருப்பதிக்கு வந்து முன்பதிவு செய்திருந்த அதே டிக்கெட்டைப் பயன்படுத்தி சாமி தரிசனம் செய்யலாம் என்றும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.