ஒமிக்ரான் தீவிரமடையுமா?: சுகாதாரச் செயலாளர் விளக்கம்!

 ஒமிக்ரான் தீவிரமடையுமா?: சுகாதாரச் செயலாளர் விளக்கம்!

ஒமிக்ரான் பரவல் குறித்து எந்த வல்லுநர்களாலும் கணிக்க முடியவில்லை. அதன் பாதிப்பு தீவிரமடையுமா என்பது குறித்து ஓரிரு வாரங்களில் தெரியவரும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாமையும், கொரோனா குறித்த நர்சிங் மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலத்தையும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று (டிசம்பர் 22) தொடங்கி வைத்தார். பின்பு, மாணவிகளுடன் பேரணியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி முகக்கவசங்களை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “ஒமிக்ரான் வைரஸ் ஒரு மரபியல் மாற்றம் அடைந்த வைரஸ். உலகில் 98 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளது. இந்த வைரஸ் மூன்று மடங்கு தீவிரமடைந்து வேகமாகப் பரவக்கூடியது. தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் எஸ்-ஜீன் டிராப் கண்டறியப்பட்டுள்ளது. 48 பேருக்கான மரபணு பரிசோதனை முடிவுகள் இன்று வரவுள்ளது. 19 வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 104 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதில் 22 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 82 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. விழிப்புணர்வுடன் செயல்பட்டால் போதும்.

தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு அடுத்தப்படியாக பலரிடம் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைந்துவிட்டது. உலகளவில் இந்த கவனக்குறைவு உள்ளது. அதனால்தான், மாவட்ட அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். விழிப்புணர்வுடன் மக்களின் பழக்கங்களிடையே மாற்றம் வர வேண்டும். இது மக்கள் இயக்கமாக மாற வேண்டும். எதற்காக இத்தனை முறை வலியுறுத்தி கூறுகிறோம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நம்மிடத்தில் கொரோனா தடுப்பூசி போதிய அளவு இருப்பு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் ஒரு லட்சத்து 25,000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. தற்போதுள்ள கொரோனா நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகளவு இல்லை. ஆக்சிஜனும் தேவைப்படவில்லை. கொரோனாவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

எந்த பகுதியில் 10 சதவிகிதம் அளவிற்கு தொற்று ஏற்பட்டுள்ளதோ அல்லது மருத்துவமனைகளில் 40 சதவிகிதம் பேர் சிகிச்சை பெற்று வந்தாலோ, அந்தப் பகுதியில் மட்டும் முழு கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கவில்லை. இருப்பினும் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

ஒமிக்ரான் பரவல் குறித்து எந்த வல்லுநர்களாலும் கணிக்க முடியவில்லை. அதன் விளைவு மற்றும் தீவிரம் குறித்து அறிந்துகொள்ள முடியவில்லை. புதிய திரிபு தீவிரமடையுமா என்பது ஓரிரு வாரங்களில் தெரியும். நாங்கள் உலக பொது சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசு தெரிவிக்கும் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள ஒமிக்ரான் தொற்றை கண்டறியும் பரிசோதனை ஆய்வகத்தை, தேசிய தொற்றுநோய் மையத்தின் துணை ஆய்வகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன்பின்னர் இங்கு ஒமிக்ரான் கண்டறியும் ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

பூஸ்டர் தடுப்பூசி குறித்து பேசிய அவர், “பூஸ்டர் தடுப்பூசி குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து எங்களுக்கு இன்னும் பதில் வரவில்லை. வெளிநாடுகளில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ள நிலையில், இந்தியாவில் தடுப்பூசியின் முதல் தவணையைச் செலுத்திக் கொள்ள மக்களிடையே ஆர்வமில்லாதது கவலையளிக்கிறது. மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

டெங்கு குறித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் 2017ஆம் ஆண்டுதான் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்தாண்டு இதுவரை 5,525 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு 30 முதல் 50 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்படுகிறது. டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் உள்ளதால் 13 எல்லை மாவட்டங்களில் தொடர் கண்காணிப்பு இருந்து வருகிறது” என்று கூறினார்.

இங்கிலாந்து

இங்கிலாந்தில் டெல்டா வகையும், ஒமிக்ரான் வகையும் சேர்ந்து அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,06,122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவல் தொடங்கியதில் இருந்து இங்கிலாந்தில் ஒரே நாளில் 100,000க்கும் மேலான பாதிப்புகள் பதிவானது இதுவே முதன்முறை. மிகவும் தொற்று நோயான ஒமிக்ரான் சுகாதாரக் கட்டமைப்பு மீது நெருக்கடியை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.