நகைக்கடன் தள்ளுபடி: யாருக்கு லாபம்...? யாருக்கு நஷ்டம்.....?

 நகைக்கடன் தள்ளுபடி: யாருக்கு லாபம்...? யாருக்கு நஷ்டம்.....?

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்வதாகத் தமிழக அரசு இன்று (நவம்பர் 1) அரசாணை வெளியிட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து வாக்குறுதி அளித்தன. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நகைக்கடன் பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், எந்தெந்த கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் நடைபெற்றது என்று ஆராய்ந்து வருகிறோம். அதன் பிறகு நகைக்கடன் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்வதாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “நகைக் கடன் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 பவுன் உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும். 6ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இதற்காகக் கூட்டுறவு நிறுவனங்களுக்குத் தமிழக அரசு தேவையான உதவிகளைச் செய்யும்.

மார்ச் 31ஆம் தேதி வரை 5 பவுனுக்கு உட்பட்டுத் தங்க நகைகளை அடமானம் வைத்து நகைக் கடன் பெற்று, அதில் ஒரு சில கடன்காரர்கள் தங்களது கடன் தொகையைப் பகுதியாகவோ அல்லது முழுமையாகவும் செலுத்தியது நீங்கலாக அன்றைய தினம் வரை நிலுவையிலிருந்த தொகை ரூ.17,114.64 கோடி என்றும் அதன் பிறகு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நகைக்கடன் களை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ திரும்பச் செலுத்தியது மற்றும் தகுதி பெறாத நேர்வுகளை நீக்கிய பின்னர் அசல் வட்டி அபராத வட்டி மற்றும் இதர செலவுகள் உள்ளிட்டு நிலுவையாக 6,000 கோடி உள்ளது என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

எனவே கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கருத்துகளின் அடிப்படையில் , மார்ச் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தைத் தகுதி நாளாகக் கொண்டு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் வழங்கப்படும் நகைக் கடன்கள் அனைத்தும் சங்கத்தின் சொந்த நிதியிலிருந்து அதாவது பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட வைப்புத் தொகையிலிருந்து வழங்கப்பட்டுள்ளதால் மேற்குறிப்பிட்ட தள்ளுபடியில் உள்ள அசல் தொகை மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இவ்வரசாணை பிறப்பிக்கப்படும் நாள்வரை அதற்குரிய வட்டியை அரசே ஏற்றுக்கொண்டு கூட்டுறவு நிறுவனங்களுக்குத் தள்ளுபடி தொகையினை அரசு வழங்கும்.

இந்த அரசாணையின் இணைப்பில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தேவைக்கேற்ப கூடுதலாக நெறிமுறைகளை ஏற்படுத்திக்கொள்ளக் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

தள்ளுபடி செய்யப்பட்ட பொது நகைக் கடன் தொகையினை அளவீடு மற்றும் செலவீடு செய்து உரிய குறிப்பான ஆணைகள் வெளியிட ஏதுவாக உரிய கருத்துருவினை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.