கன மழை நீடிக்கும்: சென்னைக்கு ரெட் அலர்ட்!!

 கன மழை நீடிக்கும்: சென்னைக்கு ரெட் அலர்ட்!! 


சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை நகரில் நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால், வடபழனி நுங்கம்பாக்கம், போரூர், வளசரவாக்கம், வேளச்சேரி, அண்ணாசாலை , தாம்பரம் என நகரின் பல்வேறு பகுதிகளும் மழைநீரால் சூழ்ந்துள்ளன. சென்னையின் முக்கிய சாலைகள் தண்ணீரில் மிதக்கிறது.வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் மழைநீர் புகுந்து உள்ளதால் அங்கு வசிப்பவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணிகளைச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மழை நர் தேங்கி அதன் காரணமாகத் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகள் நிறைவடைந்ததும் மீண்டும் மின்சார ரயில் சேவை தொடங்கும் என்று ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுபோன்று சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணி நடந்து வருவதாகவும், 507 இடங்களில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப் படுவதாகவும், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் சென்னையில் கன முதல் மிக அதிக மழை வரையில் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் சென்னையில் அடுத்த 3 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூரிலும், கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது.

🔴🔴4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

*சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை*

*மாணவர்களின் நலன் கருதி அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு – முதல்வர்*

சென்னை திரும்புபவர்கள் பயணத்தை 2 நாட்களுக்கு தள்ளி வைக்க முதலமைச்சர் கோரிக்கை.

வெளியூரில் இருந்து சென்னை திரும்புவர்கள் இரண்டு நாட்கள் கழித்து பயணத்தை திட்டமிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

சென்னை சென்ட்ரலுக்கு வரும் அனைத்து ரயில்களும் பெரம்பூர், திருவள்ளூர் ரயில் நிலையங்களில் நிறுத்தம்.

பேசின் பாலத்தை தொட்டு அபாயகரமான அளவுக்கு தண்ணீர் உள்ளதால் ரயில்கள் நிறுத்தம்.

🔴மழையால் பாதித்த மக்களுக்கு உதவுங்கள்: கட்சியினருக்கு விஜயகாந்த் வேண்டுகோள்