புதுச்சேரி அருகே வெடி விபத்து : தந்தை மகன் உடல் சிதறி பலி!
புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை ஏற்றிச்சென்றபோது திடீரென பட்டாசு வெடித்ததில், தந்தை, மகன் இருவரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பட்டாசுகளை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு சார்பில் பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைமேனன் (36). இவர் யானை வெடி என்னும் நாட்டு பட்டாசுகளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கலைமேனன் இன்று தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டத்தில் கூனிமேடு கிராமத்தில் உள்ள தனது மனைவி ரூபனாவை பார்ப்பதற்காக வந்துள்ளார். மனைவியை பார்த்துவிட்டு, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தனது மகன் பிரதீசுடன்(8) இரண்டு சாக்கு மூட்டைகளில் யானை வெடி பட்டாசுகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தார். இதில் பட்டாசு மூட்டைகள் மீது அந்த சிறுவன் உட்காந்து பயணித்துள்ளார்.
சரியாக மதியம் 1.40 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலை வழியே சென்று கொண்டிருந்தபோது கலைமேனனின் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே சரிந்து விழுந்தது. இதனால்திடீரென்று பட்டாசு வெடித்து, இருசக்கர வாகனமும் வெடித்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தந்தையும், மகனும் உடல் சிதறி உயிரிழந்தனர். தந்தை மகன் இருவரின் உடல்களும் பல மீட்டர் தூரத்திற்கு சிதறிக் கிடந்தன.
இந்த விபத்தின்போது, சாலையில் 50 அடி தூரத்தில் நின்று கொண்டிருந்த ஷர்புதீன், விஜய் மற்றும் கணேசன் ஆகிய மூவர் மீதும் பட்டாசு பட்டு படுகாயமடைந்தனர். இவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த விபத்தின்போது அருகிலிருந்த லாரி மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
இந்த சம்பவம் இருமாநில எல்லைகளில் நடந்ததால், இருமாநில போலீசார்களும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றார். மேலும், சம்பவ இடத்திற்கு விழுப்புரம் டிஐஜி பாண்டியன், மாவட்ட எஸ்.பி.ஸ்ரீநாதா வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டாசு விபத்தில் தந்தையும், மகனும் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் அங்கிருந்த மக்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்தது.