இயலாமையை மறைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை குறை கூறுகிறார்கள் - ஜெயக்குமார் தாக்கு

இயலாமையை மறைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை குறை கூறுகிறார்கள் - ஜெயக்குமார் தாக்கு

திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது. மக்களின் குறைகளை முதல்வர் ஸ்டாலின் காது கொடுத்து கேட்பதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழக அரசின் இயலாமையை மறைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை குறை கூறுவதாகவும் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த அதி கனமழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. அதில் இருந்து தற்போது வரை மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடத்தில் வெள்ளம் வடியாத நிலை உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் வெள்ளம் வடியாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மாநகராட்சியை கண்டித்துள்ளது.

நான்காவது நாளாக இன்று ஆய்வு மேற்கொண்ட மு.க ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி பணிகளில் லஞ்சம், ஊழல் நடந்ததால் தியாகராய நகருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எதுவும் செய்ததால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரைகுறையாக நடந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளால் தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.

பருவ மழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் பருவமழை குறித்து கண்காணிக்கவும் பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறவும், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையில் 044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208, 044-25303870 என்ற 5 தொலைபேசி எண்களும், 9445025819, 9445025820, 9445025821, 9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணும் செயல்பட்டு வருகிறது.

இலவச உணவு

இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாங்கள் சத்தம் போட்டதால் திமுக அரசு காது கொடுத்து கேட்பதாக கூறினார். அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படும் என்று அறிவித்தது எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். முதல்வர் தொகுதியான கொளத்தூரில் இடுப்பளவு தண்ணீர் நிற்கிறது.

சிங்கார சென்னையாக மாற்றுவோம் என்று சொன்னார்கள் சீர்கேடான சென்னையாக மாறி உள்ளதாகவும் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். துப்பறியும் சங்கர்லால் மாதிரி வருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். போர்க்கால அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் அனைத்து பணிகளையும் விரைவாக செய்தோம். இப்போது உள்ள அரசு ஆமை வேகத்தில் என்பதை விட நத்தை வேகத்தில் செயல்படுகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் குதிரை வேகத்தில் செயல்பட்டோம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். குதிரை வேகத்தில் இயங்கினால்தான் சென்னையை காப்பாற்ற முடியும்.

விரைவாக செயல்பட வேண்டும்

சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளனர். இன்னமும் மழை அதிகம் உள்ளது. எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. விரைவாக செயல்பட வேண்டும் என்றும் ஜெயக்குமார் கூறினார். முதல்வர் ஆய்வு செய்வதனால் மட்டுமே எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்றும் கூறினார். தேங்கியுள்ள தண்ணீரை ராட்சத பம்புகளை வைத்து எடுக்கவேண்டும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

புழுகுமூட்டை

1200 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிமுக ஆட்சி காலத்தில் மழைநீர் வடிகால்களை தூர்வாரினோம். வெள்ளப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இப்போது மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசு பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தனர். புளுகுமூட்டைகளின் ஒட்டு மொத்த அவதாரமாக உள்ளனர். எங்களைப்பற்றி ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று சொன்னார். முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வுக்கு போகும் இடத்தில் மக்கள் சொல்வதை காது கொடுத்தே கேட்பதில்லை என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.